காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைப்பதற்கு, உச்ச நீதி மன்றம் விதித்துள்ள காலக்கெடு இன்றுடன் (29.03.2018) முடிவடைவந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத மத்திய அரசு மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதை தவிர, தமிழக அரசுக்கு இப்போதைக்கு வேறு வழியில்லை.
அரசியல் காரணங்களுக்காகவோ (அல்லது) மத்திய அரசின் கோபப் பார்வை தங்கள் மீது பாய்ந்து விடும் என்பதற்காகவோ (அல்லது) ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ, இவ்விசியத்தில் தமிழக அரசு தயக்கம் காட்டினால், அன்று காவிரி பிரச்சனையில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு ஏற்பட்ட களங்கம், இன்று தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு நிச்சயம் ஏற்படும். தமிழக அரசியல் வரலாற்றில் அ.இ.அ.தி.மு.க மிக பெரிய களங்கத்தை சுமக்க வேண்டி வரும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் மிக பெரிய துரோகமாகக் கருதப்படும். அதேசமயம் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்நாள் லட்சியத்திற்கு விரோதமாகவும் அது அமைந்து விடும்.
எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க வலியுறுத்தி, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை பதவி விலக செய்வது; அனைத்துக் கட்சி தலைவர்களுடன் சென்று பிரதமர் நரேந்திர மோதியை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுப்பது, ஆர்பாட்டம், போராட்டம், சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதம்… என்று அதிரடி காட்டுவது, இப்படியெல்லாம் செய்வதால், தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை.
ஏனென்றால், காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து முழுமையாக ஆய்வு செய்து அதை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களிடம் சமர்ப்பித்தவன் என்கிற முறையில் நான் சொல்கின்றேன்.
காவிரி நதி நீர் பிரச்சனையில் தொடக்க காலம் முதல் இன்றுவரை மிக பெரிய அரசியல் சித்து விளையாட்டு அடங்கியிருக்கிறது. அதில் நீங்களும் சிக்கி கொள்ள வேண்டாம் என்று தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியை இதன் மூலம் கேட்டுக் கொள்கின்றேன்.
ஏனென்றால், தமிழகத்தில் இருக்கும் பாஜக பிரமுகர்கள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பார்கள்; ஆனால், அதே கர்நாடாகாவில் இருக்கும் பாஜக பிரமுகர்கள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கூடாது என்பார்கள்.
அதே போல் தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பார்கள்; ஆனால், அதே கர்நாடாகாவில் இருக்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கூடாது என்பார்கள்.
அதே போல் தமிழகத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பார்கள்; ஆனால், அதே கர்நாடாகாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கூடாது என்பார்கள். இதற்கு பெயர்தான் தேசியம்; இதுதான் தேசிய கட்சிகளின் லட்சணம்… இதற்கு பிரதமர் நரேந்திர மோதி மட்டும் விதி விலக்கா என்ன?
எனவே, காவிரி நதி நீர் பிரச்சனையில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடைப்பிடித்த அதே சட்ட போராட்டத்தை கையில் எடுப்பதுதான் தமிழ்நாட்டிற்கும் நல்லது, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமிக்கும் நல்லது.
நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com