தெருவில் சுற்றித்திரியும் தெய்வங்கள்…!

இரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், குப்பைத் தொட்டிகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித் திரியும் மொழி தெரியாத நபர்கள், மூளை வளர்ச்சி குன்றியோர், மனநோயாளிகள், வேலைக்கு செல்ல முடியாத மற்றும் உழைக்க முடியாத மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள், குடும்ப உறுப்பினர்களாலும், உறவினர்களாலும் புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகள்… இதுப்போன்ற நபர்கள் நமது தெருக்களிலும், நாம் கடந்து செல்லும் சாலைகளிலும் அனாதையாத சுற்றித் திரிவதையும், பிச்சையெடுத்து  வருவதையும், நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

தன்நிலை மறந்து, தன் அடையாளம் இழந்து,  தான் யார் என்றே  புரியாமல், உண்ண உணவு இன்றி, பருக நீரின்றி, உடுத்த உடையின்றி, படுக்க இடமின்றி, கிட்டத்தட்ட நடைப்பிணங்களாகவே நாட்களை கடத்தி வரும் இவர்களைப் பற்றி என்றைக்காவது ஒரு நிமிடம் நாம் யோசித்து இருக்கின்றோமா?

ஒரு நல்ல மனிதன் ஒன்று குழந்தையை போல இருப்பான்; இல்லையென்றால், பைத்தியம் மனநிலையில் இருப்பான். அவன்தான் உண்மையான மனிதன். அப்படி இருப்பவர்கள் யாருக்கும் துரோகம் செய்யமாட்டார்கள்; யாரையும் பழித்தீர்க்க மாட்டார்கள். அவர்களிடம் கள்ளம், கபடம் அறவே இருக்காது. வெகுளியாகவும், வெள்ளந்தியாகவும் இருப்பார்கள். எதையும் எளிதில் மறந்து விடும் மனமும், மற்றவர்களை மன்னிக்கும் குணமும் அவர்களிடம் அதிகமாகவே இருக்கும். அதனால்தான் அவர்கள் மற்றவர்களால் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள். அத்தகைய மாற்றங்கள்தான் அவர்களுடைய வாழ்க்கையில் பெரிய தடுமாற்றத்தை உருவாக்கி, தடம் புரண்ட தொடர் வண்டியை போல, செயல் இழந்து போய்விடுகிறார்கள். அதன் பிறகு அவர்களுக்கு இந்த சமூகம் கொடுக்கும் பட்டம் பைத்தியம், லூசு, அனாதை, நாதியற்றவன்…!

நமது ஞானக் கண்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும்,  யாசகம் கேட்டு வாழ்பவர்களாகவும் தோற்றமளிக்கும் இவர்கள் அனைவரும், எங்கிருந்து வருகிறார்கள்? செவ்வாய் கிரகத்தில் இருந்தா வருகிறார்கள்?

இந்த அவலத்திற்கு சமூகமோ,  அரசாங்கமோ முதல் காரணம் அல்ல! நமது சுயநலமும், போலித்தனமான வாழ்கையும்தான் இதற்கு அடிப்படை காரணம்.

நாம் ஒவ்வொருவரும் நம் பெற்றோர் மீதும்,  நம் உடன் பிறந்தவர்கள் மீதும், நம் உறவினர்கள் மீதும், நம் குழந்தைகள் மீதும், உண்மையான அன்பு செலுத்தி, அவர்களை அரவணைத்து, ஆதரித்து, கண்ணும், கருத்துமாக அவர்களை வழி நடத்தி  பாதுகாத்து இருந்திருந்தால், இந்த உலகத்தில் “அனாதைகள்” என்ற வார்த்தையே அகராதியில் இருந்து அகற்றப்பட்டிருக்கும்.

அனாதை மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் இங்கு அவசியம் இல்லாமல் போயிருக்கும்.

அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவிக்காக கையேந்தி நிற்க வேண்டிய அவலமும் அடியோடு ஒழிந்திருக்கும்.

ஒரு மனிதன் ஒரு சக மனிதனிடம் உணவுக்காகவும், உடைக்காகவும், உயிர்வாழ்வதற்காகவும் கையேந்தி பிச்சை கேட்பதை நாம் ஒவ்வொருவரும் தேச அவமானமாக கருத வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சமூக அவலங்களை முழுமையாக தடுக்க முடியும்.

ஒரு மழலை எவ்வாறு தன் பெற்றோர்களாலும், உற்றார், உறவினர்களாலும் போற்றி பாதுகாக்கப்படுகிறதோ..! அதுபோல, ஒவ்வொரு முதியோர்களையும் நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.  

-வீ.குணசேகரன்.

 

12 Comments

  1. kamalu deen March 31, 2018 9:42 am
  2. கோபிநாத் March 31, 2018 9:45 am
  3. murugan March 31, 2018 9:49 am
  4. Murali nithish March 31, 2018 10:17 am
  5. Harikrishnan March 31, 2018 10:25 am
  6. richie March 31, 2018 11:25 am
  7. கலையரசன் March 31, 2018 12:16 pm
  8. Tamizhini March 31, 2018 12:33 pm
  9. Dhivya March 31, 2018 12:54 pm
  10. Dinesh March 31, 2018 2:35 pm
  11. k.venkataraman April 1, 2018 12:55 pm
  12. bala April 5, 2018 8:52 pm

Leave a Reply