திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த சிறிய நகரம். இவ்வூரில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் மற்றும் சதுப்புநில பகுதிகள் (mangrove forest) எனும் அழகிய சுற்றுலா தலம் இன்னும் வெளியுலகிற்கு தெரியாமலே உள்ள ஒரு அற்புதமான பொக்கிஷம். சொல்லப்போனால் இப்பகுதியில் வாழும் மக்கள் பலரும் இங்கு சென்று வந்ததில்லை எனலாம். பாமனி ஆறு, கோரை ஆறு, கிளைதாங்கி ஆறு, மரைக்கா கோரையாறு என பல்வேறு ஆறுகள் இப்பகுதியில் வங்க கடலில் (பாக் ஜலசந்தியில்) கலக்கும் இடமாகும். இந்த ஆறுகள் உருவாக்கியுள்ள லகூன் எனும் பகுதியும், இங்கு அமைந்துள்ள சதுப்பு நில காடுகளும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள் இப்பகுதியை மேலும் ரம்மியமாக்குகிறது.
இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் எளிதில் செல்லும் வகையில் சுந்தரம் பாலம் அருகேயோ அல்லது வேறு இடத்திலோ பிச்சாவரம், முட்டுக்காடு போன்ற இடங்களில் உள்ளது போன்ற படகுத்துறைகளை அமைத்து தகுந்த வசதிகளை தமிழ்நாடு அரசும் மற்றும் சுற்றுலா துறையும் ஏற்படுத்தினால் கண்டிப்பாக இது அனைவரும் விரும்பும் ஒரு சுற்றுலா ஸ்தலமாக மாறும்.
தில்லைவிளாகம் ஸ்ரீராமர் கோவில் மற்றும் கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் போன்ற சரித்திர புகழ்பெற்ற ஆலயங்கள் அருகில் உள்ள முக்கிய இந்து ஆலயங்கள். ஜாம்பவனோடை தர்கா நாகூர் தர்காவைவிட பழமை வாய்ந்தது. இங்கு தினமும் ஏராளமான முஸ்லிம் யாத்திரீகர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற பகுதிகளிலிருந்தும் வருகின்றனர். வேளாங்கன்னி, நாகூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவாரூர், திருத்துறைபூண்டி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் போன்றவை அருகில் உள்ள முக்கிய நகரங்கள்.
-K. மகேஷ்வரன்.