திருச்சி துவாக்குடியில் நடைப்பெற்ற ஜல்லிகட்டு போட்டியில் ஒரு போலீசார் உட்பட, 30 பேர் காயமடைந்தனர்!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்றான ஜல்லிகட்டு போட்டி தமிழகம் முழுவதும் பரவலாக நடைப்பெற்று வருகிறது. அதன் ஒருப்பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் சித்திரை ஏர்முனை திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற ஜல்லிகட்டு போட்டியை திருச்சி சப்-கலெக்டர் கமல்கிஷோர் தொடங்கி வைத்தார்.

இந்த ஜல்லிகட்டு போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 800 காளைகள் கலந்து கொண்டது. இதில் 348 மாடுபிடி வீரர்கள் 4 பிரிவுகளாக களம் இறக்கபட்டனர்.

இந்த ஜல்லிகட்டு போட்டியில் காளைகளை அடக்கியவர்களுக்கும், மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் காயமடைந்த நவல்பட்டு காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் சுரேஷ்(24) உட்பட, 30 பேர் காயமடைந்தனர். அதில் வாழவந்தான் கோட்டையை சேர்ந்த மாடுபிடி வீரர் ராஜ்குமார்  மற்றும் பொது மக்கள் திருவெறும்பூர் இந்திராநகர் மாரிமுத்து(65), வாழவந்தான் கோட்டை வேம்பு, துவாக்குடி கோபி, நவல்பட்டு வசந்தகுமார், ராசம்பட்டி கணேசன், தஞ்சை வில்லரம்பட்டி உலகநாதன் ஆகியோர் மேற்சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில் கணேசன், உலகநாதன் மட்டும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.

மாடு பிடிப்பதை  வேடிக்கை பார்த்த மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த கார்த்திக்(22), மனோஜ் (20) ஆகிய இருவரையும் கதண்டு கடித்தது அதனால் மயக்கமடைந்த அவர்களை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக ஜல்லிகட்டு மாடுகள் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதியுடன் இருக்கிறதா? என்பதை திருச்சி கால்நடை துறை உதவி இயக்குநர் எஸ்தர் ஷீலா தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவர்கள், மாடுபிடி வீரர்கள் தகுதி பரிசோதனையும், மாடு பாய்ந்ததில் காயமடைந்தவர்களுக்கும் முதற்கட்ட சிகிச்சையும் அளித்தனர். 

நவல்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் பரமேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வாகனமும், திருவெறும்பூர் டிஎஸ்பி சேகர் தலைமையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இந்த விழாவில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பொ.மகேஷ், திருவெறும்பூர் தாசில்தார் ஷோபா, திமுக நிர்வாகி நவல்பட்டு விஜி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சாருபாலதொண்டைமான், சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் சாந்தி, சுப்பிரமணி, செல்வகணேஷ்   உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜல்லிகட்டு போட்டி முடிந்து வரும் காளைகள் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞசாலையில் ஓடி வருகின்றன. அப்படி வந்த ஒரு காளை மீது திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் மோதியது அதில் அந்த காளை காயமடைந்தது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply