திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காந்திநகரில் உள்ள முத்துமாரியம்மன்கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் அடித்ததால் தப்பி ஓடிய கொள்ளையனை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர். திருவெறும்பூர், காந்திநகர் சுற்று வட்டப்பகுதி மக்களின் வழிபாட்டு தளமாக இக்கோயில் அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு கோவில் சுற்றுச்சுவர் ஏறி குதித்த கொள்ளையன் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்துள்ளான். அப்போது உண்டியல் பூட்டில் அமைக்கப்பட்டிருந்த அலாரம் அடித்ததால் கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான். அலாரசத்தம் கேட்ட பொது மக்கள் கோவிலை பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த காணிக்கை காசுகள் கீழே கொட்டிகிடந்தது தெரியவந்தது. இது சம்மந்தமாக கோவில் நிர்வாக அறங்காவலர் தண்டபாணி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு கோவில் கருவரை முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து குற்றவாழியை தேடிவருகின்றனர்.
ஏற்கனவே இந்த கோவிலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி கொள்ளை போனது, அதுகுறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை அதன் பிறகே கோவில் உண்டியலில் அலாரம் மற்றும் கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர் அலாரம் அடித்ததால் கோவில் உண்டியில் இருந்த பொது மக்கள் காணிக்கை தப்பியது.
கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள குற்றவாளியின் படத்தை வைத்தாவது குற்றவாளியை திருவெறும்பூர் போலீசார் பிடிப்பார்களா? இல்லையா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்
-ஆர்.சிராசுதீன்