காவிரி விவகாரம்: சர்க்கரை என்று எழுதி நக்கினால் இனிக்காது; தாமதிக்கப்பட்ட நீதி புறக்கணிக்கப்பட்ட நீதிக்கு சமம்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்று வரும் இத்தருணத்தில், கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடுவதில் பிரதமர் நரேந்திர மோதி மும்முரமாக இருந்து வருகிறார்.

அதன்படி முதல் கட்ட  வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் ஆலோசனைக் குழு கூட்டம் நடைப்பெற்றது.

காவிரி நதிநீர்  விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 6 வார காலம் வரை அமைதியாக இருந்துவிட்டு, தமிழக அரசின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தவுடன், பால்வாடி குழந்தையை போல ‘Scheme’ (ஸ்கீம்) என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருப்பது, தமிழகத்தை வஞ்சிக்கும் செயல் மட்டுமல்ல; நீதியை நிந்திக்கும் செயலாகும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மத்திய அரசே மதிப்பளிக்கவில்லையென்றால், இதை விட தேசிய அவமானம் வேறு என்ன இருக்க முடியும்?

காவிரி நதிநீர்  விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒரே மனநிலையில்தான் உள்ளது.

கர்நாடகா மாநில தேர்தலை மனதில் வைத்து இதுபோன்ற கபட நாடகங்களை அரங்கேற்றுவதை இனியும் தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

இந்நிலையில், காவிரி நதி நீரை நம்பி பலதரப்பட்ட மக்கள் உள்ளனர். எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின் படி காவிரி நீரை திறந்துவிட வேண்டும். நதிநீர் பிரச்சினையில் ஒவ்வொரு முறையும் தலையிட்டு நாங்கள் உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது. அதனால் தான் இதற்கான செயல் திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும் என நாங்கள் கூறினோம். நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கினோம். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான திட்டத்தை மார்ச் 29-ம் தேதிக்குள் ஏன் செயல்படுத்தவில்லை?

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேலாண்மை திட்டத்தை தயாரித்து, வரைவு திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

மத்திய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்த பின்பே இந்த விஷயத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியும்.  கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதி நிலவுதை உறுதி செய்ய வேண்டும்.

வழக்கு விசாரணை மே 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று குறிப்பிட்டுள்ளது.

சர்க்கரை என்று எழுதி நக்கினால் இனிக்காது; அதுபோலதான் நீதிமன்ற தீர்ப்பும். தாமதிக்கப்பட்ட நீதி புறக்கணிக்கப்பட்ட நீதிக்கு சமம்.

இதற்கு பிறகாவது மத்திய அரசு மனசாட்சியோடு நடந்துக் கொள்ளுமா?

  –டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply