திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பிலோமினாள் புரத்தை சேர்ந்தவர் திருமேனி ஆழ்வார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்றிரவு கடையை பூட்டி விட்டு இன்று அதிகாலை திறக்க வந்தார். அப்போது கடை சட்டரின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் சட்டரின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவும் உடைக்கப்பட்டிருந்தது. மளிகை கடையினுள் கார் வாங்குவதற்காக வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுக்குறித்து திருமேனி ஆழ்வார் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மளிகை கடையின் மாடியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடை, உள்ளிட்ட 5 கடைகளில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும் மர்ம நபர்கள் ஒரு கடையின் பூட்டை உடைக்க முயற்சி செய்த போது அருகில் உள்ள டைலர் ஒருவர் குரல் கொடுக்கவே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து அப்பகுதியில் 5 கடைகளில் பூட்டை உடைத்திருப்பது பொது மக்களிடையே பீதியை எற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் போலீசார் மளிகை கடை உள்ளே உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து கொள்ளையடித்த மர்மநபர்களை தேடிவருகின்றனர். சம்மந்தபட்ட கடை உரிமையாளர்களிடம் சிசிடிவி கேமிரா காட்சி பதிவுகளை ஊடகத்துறையினருக்கு தரக்கூடாது என திருவெறும்பூர் போலீசார் எச்சரித்து வருகின்றனர். 100 அடி தூரத்தில் புறக்காவல் நிலையம் இருந்தும் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது வணிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி, வருகிறது.
-ஆர்.சிராசுதீன்.