நாச வேலைக்கு திட்டமிடும் பாகிஸ்தான் ராணுவம்! இந்திய எல்லையில் பதற்றம்!

pakistan-army-coup

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 2003-ம் ஆண்டு முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி வந்து தாக்குதல் நடத்துகிறார்கள். இந்தியாவில் நாச வேலைக்கு திட்டமிடும் தீவிரவாதிகளை ஊடுருவ செய்யவே பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி எல்லையில் அத்துமீறுவது தெரிய வந்தது.

ondia-pakistan-border

கடந்த 8-ந்தேதி காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் அத்துமீறி வந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம், 2 இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றது. பிறகு பலியான 2 வீரர்களில் ஹேம்ராஜ்சிங் என்ற வீரரின் தலையை துண்டித்து பாகிஸ்தான் வீரர்கள் எடுத்து சென்று விட்டனர். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

firstindian militry 6

பாகிஸ்தானின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. என்றாலும் பாகிஸ்தான் வீரர்கள் அதன் பிறகும் 4 தடவை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது.

genvikransingh

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் உள்ள சக்கன்- டா- பாக் எல்லைப் பகுதியில் நேற்று மதியம் இரு நாடுகளின் ராணுவ பிரிகேடியர் கமாண்டர் அதிகாரிகள் அளவிலான கொடி அமர்வு பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது இந்திய ராணுவ அதிகாரிகள், 2 வீரர்கள் தலை துண்டித்து கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ராணுவ வீரர் ஹேம்ராஜ் தலையை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

ஆனால் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், 8-ந்தேதி பூஞ்ச் செக்டாரில் தங்கள் தரப்பில் இருந்து எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றனர். 2 இந்திய வீரர்கள் தலை துண்டிப்புக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு வருவதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த தாக்குதல் இதுவரை இல்லாத அளவுக்கு மிக, மிக மோசமானதாக இருக்கும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவின் பொறுமையை சோதிக்கும் வகையில் இந்த தாக்குதல் இருக்கும் என்று கருதப்படுகிறது. இதையடுத்து காஷ்மீர் எல்லை நெடுக கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்து பணியும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் நயவஞ்சக திட்டத்தை உளவுத்துறை மூலம் அறிந்த இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் ஆவேசமாகி உள்ளனர். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தயாராகி வருகிறார்கள். இது தொடர்பாக ராணுவ தளபதி பைக்ராம்சிங் கூறியதாவது:-

பாகிஸ்தானுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும். அதற்கான நேரம், கால அவகாசத்துக்காக காத்திருக்கிறோம். இனி எல்லையில் எந்தப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறினாலும் உடனே பலத்த பதிலடி கொடுக்க கமாண்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எல்லையில் உள்ள தளபதிகள் மேலிட உத்தரவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. எதிரிகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும்படி தகவல் அனுப்பி உள்ளோம். போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு நாங்கள் மரியாதை கொடுப்போம். ஆனால் பாகிஸ்தான் அதை மீறும்போது நாம் பொறுமையாக இருக்க முடியாது.

காஷ்மீருக்குள் தீவிர வாதிகளை அனுப்புவதற்காக பாகிஸ்தான் மிகவும் தந்திரமாக இத்தகைய அத்து மீறல்களை மேற்கொள்கிறது. இதை அந்தந்த பகுதி பட்டாலியன் கமாண்டர்கள் முடிவு எடுத்து பதிலடி தாக்குதல் நடத்துவார்கள். ஜனவரி 8-ந்தேதி பூஞ்ச் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல், மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. 10 நாட்களாக நோட்டமிட்டு இந்த தாக்குதலை அவர்கள் நடத்தி உள்ளனர். அவர்கள் நடந்து கொண்ட விதம் ஜெனீவா மாநாட்டு ஒப்பந்தத்துக்கு எதிரானது. ஆனால் தாக்குதல் நடத்தி விட்டு, பாகிஸ்தான் பொய் சொல்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் பெரும் போராக மாற வாய்ப்பு இல்லை.

தற்போதைய சூழலில் இந்தியா தக்க பதிலடி கொடுக்க உரிமை உள்ளது. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும், அங்குள்ள தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். இந்திய ராணுவ வீரர்களை கொன்று தலையை துண்டித்து வெற்றி கேடயமாக கொண்டு செல்கிறார்கள். இதற்கு முன்பும் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன. நமது வீரர்களின் தலை துண்டிக்கப்படுவது ராணுவத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டே இதை செய்கிறது. இனி எல்லையில் உரிய பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு ராணுவ தளபதி பைக்ராம்சிங் கூறினார்.

இந்தியா, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் பேச்சு தோல்வி அடைந்து விட்டதால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இது மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. இக்கட்டான இந்த சூழ்நிலையிலும் பிரதமர் மன்மோகன்சிங் மவுனமாக இருப்பதை பல்வேறு கட்சிகளும் கண்டித்துள்ளன.

 எஸ்.சதிஸ்சர்மா

Leave a Reply