திருச்சி, சர்க்கார்பாளையம் அருகே காவிரி ஆற்றுக்குள் மணல் அள்ளிக்கொண்டிருந்த மாட்டு வண்டிகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்!

திருச்சி -கல்லணை சாலையில் காவிரி ஆற்றின் வலது கரையில் பனையகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சர்க்கார்பாளையம் அருகே, காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள மாவட்ட கனிம வளம் மற்றும் பொதுப் பணித்துறை நிர்வாகம்  கடந்த 5 நாட்களாக சீட்டு வழங்கி வந்தது. இதனை தொடர்ந்து  மாட்டு வண்டிகளில் இங்கு மணல் அள்ளி வந்தனர்.

ஒரே நேரத்தில் திருவெறும்பூர், வேங்கூர், பாப்பாக்குறிச்சி, காட்டூர், குவளக்குடி, பனையகுறிச்சி, சர்க்கார்பாளையம், கீழமுல்லக்குடி, ஒட்டக்குடி, காந்திபுரம், புத்தாபுரம் மற்றும் ஸ்ரீரங்கம் வட்டம், லால்குடி வட்டம், இப்படி பல்வேறு பகுதிகளில் இருந்து  நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் இங்கு மணல் அள்ள வந்ததால், அப்பகுதி முழுவதும் விடியற்காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் திருச்சி – கல்லணை சாலையில் பேருந்து மற்றும் பல்வேறு  மோட்டார் வாகனங்கள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் பனையகுறிச்சி,  சர்க்கார்பாளையம் கிராம மக்களின் சகஜ வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், இன்று (27.04.2018) அதிகாலை முதலே காவிரி ஆற்றுக்குள் மணல் அள்ளிக்கொண்டிருந்த மாட்டு வண்டிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில்  ஈடுப்பட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் காவல்துறையினர், பேச்சு வார்த்தை நடத்தி மாட்டு வண்டிகளை மணலோடு எடுத்து செல்ல அனுமதித்தனர்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் அந்தந்த பகுதிகளுக்கு தனித்தனியாக பாதை அமைத்து கொடுத்தால், மாட்டு வண்டித் தொழிலாளர்களின் பிரச்சனை முற்றிலும் தீர்ந்து விடும். இப்பகுதி பொதுமக்களும் நிம்மதி அடைவார்கள்.

அதே போல், மாட்டு வண்டிகளில்  மணலை  ஏற்றி சென்று வெளியூர்களுக்கு லாரி மற்றும் வேன்களில் அதிக விலைக்கு மணல் விற்பனை செய்வதை மாட்டு வண்டி உரிமையாளர்கள் முற்றிலும் நிறுத்திக்கொள்ள வேண்டும். உள்ளுர் மக்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே மணல் விற்கப்படுவதை மாட்டு வண்டி உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

 

Leave a Reply