தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை, தமிழக அரசு உடனடியாகக் கைப்பற்ற வேண்டும்: தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதமி (Shanmugha Arts, Science, Technology & Research Academy (SASTRA)) என்ற சுருக்கமே சாஸ்திரா என்பதாகும்.

சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர் மாவட்டம், திருமலைசமுத்திரத்தில் அமைந்துள்ளது. சாஸ்திரா 1984 ஆம் ஆண்டு சண்முகா பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்டது. இது தமிழ்நாட்டில் முதல் தனியார் பல்கலைக்கழகமாகும். சாஸ்திரா பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர். ஆர்.சேதுராமன் மற்றும் அவரது வாரிசுகளின் தலைமையில், இன்று வரை லாபகரமாக இயங்கி வருகிறது.

சுமார் 168 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம், அதில் 42.5 ஏக்கர் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டங்களையும், வளாகங்களையும் கட்டியுள்ளது.  மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கமான உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் தொடர்பு இவர்களுக்கு இருப்பதால், 42.5 ஏக்கர் அரசு நிலங்களை இன்று வரை மீட்க முடியாமல், தமிழக அரசு தடுமாறிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை, தமிழக அரசு உடனடியாகக் கைப்பற்ற வேண்டும் என்று, திமுக. செயல் தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பகிரங்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, தஞ்சாவூரில் அமையவிருக்கும் திறந்தவெளி சிறைச்சாலையைத் தடுக்கும் விதமாக, அதற்கென ஒதுக்கப்பட்ட நிலத்தில் சுமார் 30 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டு, அதிலிருந்து வெளியேற மாட்டோம் என்று ஏறக்குறைய 22 வருடங்களுக்கும் மேலாகப் பிடிவாதம் காட்டிவரும் சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் சமூகவிரோதப் போக்கு, ஒரு கல்வி நிலையத்திற்கு உகந்த அணுகுமுறையாக இல்லை. 

நிலப்பரிவர்த்தனை முறையில் தொலைதூரத்தில் உள்ள பயன்படாத மாற்று நிலங்கள் அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி, அரசின் உயர்மட்ட அதிகாரிகள் வரை நிராகரித்தபோதும், ஆக்கிரமித்த நிலங்களில் சட்டவிரோதமாக கட்டிடங்களைக் கட்டிக்கொண்டு, இன்னும் தொடர்ந்து அரசுக்கு விண்ணப்பித்தும், நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தும் அரசின் பொதுநிலத்தை தனியுடைமையாக்கி, ஏகபோகமாக அபகரித்துக்கொள்ள நினைக்கும் தனியாருக்கு எவ்விதத்திலும் இசைந்து போகக்கூடாது. 

திட்டத்திற்கான வரைவு அனுமதி இல்லாமல் கட்டிய கல்வி நிலையங்கள் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டிய கல்வி நிலையங்கள் புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. 

ஆனால், சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் ஆக்கிரமிப்பை மட்டும், சந்தேகப்படும்படியான காரணங்களுக்காக கண்டுகொள்ளாமல் இருப்பதோடு, தலைமைச்செயலாளர் மட்டத்தில் இந்த நிலத்திற்கு மாற்று நிலத்தை பெற்றுக்கொண்டு, எப்படியாவது சாஸ்திரா பல்கலைக்கழகத்திற்கு உதவிட, இப்போதும் முயற்சிப்பது ஏன் என்றும் வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்று ஒருபுறம் ஏழைகள் வசிக்கும் குடிசைகளையும், சிறிய சிறிய வீடுகளையும் கூட இடித்துத் தள்ளும் அதிமுக அரசு, அரசு நிலத்தை ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆக்கிரக்கவும், அதில் கட்டிடம் கட்டவிட்டும் வேடிக்கை பார்ப்பது ஏன்?

ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களில் கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி எப்படி வழங்கப்பட்டது? அப்படி வழங்கிய அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? 

அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிய பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு எப்படி அங்கீகாரம் அளித்தது? 

இப்போது அந்தப் பல்கலைக்கழகம் கொடுக்கும் மாற்று நிலங்களை ஏற்றுக்கொண்டு, ஆக்கிரமித்த நிலங்களை விட்டுவிடுங்கள் என்று நில நிர்வாகத்துறைக்கு தலைமைச்செயலாளரே அழுத்தம் கொடுப்பதாக வெளிவந்த செய்திகளின் பின்னணி என்ன?

ஆகவே, சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை உடனடியாகக் கைப்பற்றி, தஞ்சாவூரில் சிறைச்சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் திறந்தவெளி சிறைச்சாலை விரைவில் அமைவதற்கு, அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆக்கிரமித்த நிலங்களை திருப்பிக் கொடுக்கும் எவ்வித நடவடிக்கைக்கும் அதிமுக அரசு உடன்படாமல், அரசுக்கு விரோதமாகச் செயல்படும் அதிகாரிகளை கண்காணித்து, அவர்கள் எவ்வளவு உயர்நிலையில் இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தமது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

One Response

  1. K.Venkataraman May 15, 2018 3:29 pm

Leave a Reply