இந்தியா முழுவதும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மே-22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கான விளக்க கூட்டம் மற்றும் ஆர்பாட்டம் நேற்று மதியம் ஏற்காடு அஞ்சல் அலுவலக வாயிலில் நடைப்பெற்றது. என்.எப்.பி.இ. ஜி.டி.எஸ். சங்க சேலம் கோட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் ஆர்பாட்டம் துவங்கியது.
ஆர்பாட்ட உரையில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் பாலமுருகன் பேசியதாவது:
அஞ்சல் துறையில் 2.5 இலட்சத்துக்கும் மேலான கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்க வேண்டிய 7-வது ஊதியக்குழுவிற்காக கமலேஷ்சந்திரா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு அவரும் அரசிற்கு பரிந்துரைகளை கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், அரசு 7-வது ஊதியக்குழு அமுல்படுத்தவில்லை. எனவே கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையின்படி 7-வது ஊதியக்குழு அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மே-22 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். அஞ்சல் துறையில் கிராமிய அஞ்சல் ஊழியர்களே பணியாற்றுவதாலும், போராட்டத்தில் அஞ்சல் 3, அஞ்சல் 4 உள்ளிட்ட சங்கங்களும் இணைந்துள்ளதால் வேலை நிறத்ததினால் அஞ்சல் துறை பெரிய அளவில் முடங்கும்” இவ்வாறு பேசினார்.
ஆர்பாட்டத்தில் லோகநாதன், ரமேஷ், வெங்கட்ராமன் உள்ளிட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கலந்துக்கொண்டனர். இவர்கள் 7-வது ஊதியக்குழு அமுல்படுத்தாததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
-நவீன்குமார்.