‘மரண வாசல் மூடும் வரை, வீடு வாசல் திரும்ப மாட்டோம்’- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடைப்பெற்ற இறுதி யுத்தத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு! -தூத்துக்குடியில் பதட்டம்.

‘மரண வாசல் மூடும் வரை, வீடு வாசல் திரும்ப மாட்டோம்’– என்ற உறுதியோடு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை, மடத்துக்குளம் அருகே காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.

காவல் துறையினரின் இத்தகைய நடவடிக்கையை கண்டுக்கொள்ளாத பொதுமக்கள் முன்னோக்கி சென்றனர். இதனால் பதட்டம் அடைந்த காவல் துறையினர், கூட்டத்தை கலைப்பதற்காக பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் துறையினர் மீது கல்வீசி எதிர் தாக்குதல் நடத்தினர்.

மக்களின் எண்ணிக்கை அதிகமாகவும், காவல் துறையினரின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்ததால், தாக்கு பிடிக்க முடியாமல் காவல் துறையினர் ஓட்டம் பிடித்தனர். 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது பொதுமக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதனால் வெறுப்படைந்த பொதுமக்கள், காவல் துறையினர் வாகனத்தை கவிழ்த்தும், கல்லெறிந்தும் தீ வைத்தும் சேதப்படுத்தினர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். உயிர் பிழைத்தால் போதும் என்று அங்கிருந்த பணியாளர்களும், அதிகாரிகளும் தப்பித்து ஓடினர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.

கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு பள்ளி மாணவி உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வன்முறையில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தரப்பில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

அடுத்து என்ன நடக்குமோ? என்ற அச்சம் அனைவர் மனதிலும் தற்போது எழுந்துள்ளது.

இது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான “இறுதி யுத்தம்” என்று பொதுமக்கள் சார்பில் முன்கூட்டியே பகிரங்கமாக அறிவித்து இருந்த நிலையில், எப்பொழுதும் நடக்கும் வழக்கமான போராட்டம்தானே என்ற அலட்சியத்தில் காவல்துறை இருந்துவிட்டது.

முன் கூட்டியே பொதுமக்களிடம் நம்பகமான முறையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால் இன்று நடந்த இந்த போராட்டத்தின் தீவிரத்தை நிச்சயம் குறைத்து இருக்கலாம் (அல்லது) பாதுகாப்பை இன்னும் பலமடங்கு பலப்படுத்தி இருந்தால் இந்த கலவரத்தையும், துப்பாக்கிச் சூட்டையும் தவிர்த்து இருக்கலாம். ஆனால், இரண்டையுமே செய்யாமல், 144 தடை உத்தரவை மட்டுமே அறிவித்து விட்டு, அலட்சியமாக இருந்ததின் விளைவுதான், மக்களின் இந்த அத்து மீறலுக்கானக் காரணம். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் காவல்துறை, உளவு துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

 

 

 

 

Leave a Reply