வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று நடைபெற்றது. திருவாரூர் கீழவீதி பகுதியில் இருந்து 96 அடி உயரத்தில் 300 டன் எடையுடன் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான தேரினை பக்தர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் வடம் பிடித்து இழுத்தனர்.
பஞ்ச பூததலங்களில் பூமிக்குரியதளமாகவும், சர்வ தோஷ பரிகாரதலமாக விளங்குவது, திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆகும். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் இது திகழ்கிறது.
இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை கொண்டது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரப்பெருவிழா நிறைவாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேர் 96 அடியாகும்.
இதன் மொத்த எடை 300 டன் திருச்சி பெல் நிறுவனம் மூலம் நான்கு இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த தேரில் நான்கு அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து 7,500 சதுர அடி கொண்ட தேர் வண்ண சீலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மிக பிரமாண்டமான ஆழித்தேரில் தியாகராஜர் வீற்றிருக்க நான்கு வீதிகளிலும் உலா வரும் அழகு காண்போரை வியக்க வைத்தது.
ஆழித்தேருக்கு முன்னதாக விநாயகர், சுப்ரமணியர் தேர்கள் இழுக்கப்பட்டது. சண்டிகேஸ்வரர் கமலாம்பாள் தேர்களும் பின்னர் வடம் பிடிக்கப்பட்டது.
தேரில் தியாகராஜர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். சிவனடியார்கள் பக்தர்கள் தேருக்கு முன்னதாக சிவ வாத்தியங்களை இசைத்தபடி சென்றனர். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் திருவாரூரில் குவிந்தனர்.
-கே.நாகராஜன்.