திருச்சி, திருவெறும்பூர் அருகே பயணச்சீட்டு எடுக்காததை தட்டிக் கேட்ட அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் மீது திமுக பிரமுகர் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலைவெறி தாக்குதல்!


திருச்சி, திருவெறும்பூர் அருகே அரசு பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காததை தட்டிக் கேட்ட அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, துவாக்குடி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பேருந்துகளை இயக்கமாட்டோம் என்று போராட்டம் நடத்தியதால், 2 மணி நேரம் பேருந்துகள் இயங்கவில்லை.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் பழனிசாமி.

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு புதுத்தெருவை சேர்ந்தவர் ஓட்டுநர் பழனிசாமி (வயது 38) துவாக்குடி அரசு போக்குவரத்து பணிமனை கட்டுப்பாட்டில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சூரியூர் செல்லும் அரசு பேருந்தில் ஓட்டுனராக வேலைப்பார்த்து வருகிறார்.

அதே பேருந்தில் மணப்பாறை புத்தாநத்தத்தை சேர்ந்த முனியாண்டி (வயது 44) என்பவர் நடத்துனராக வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் நேற்று இரவு சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சூரியூருக்கு சுமார் 11.30 மணியளவில் திருவெறும்பூர் வழியாக சென்றுள்ளது.

அப்படி சென்ற பேருந்தில் காந்தலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து இவர் திமுக கட்சி நிர்வாகி, இவரது மனைவியும் அவரது தாயாரும் இவர் பயணச்சீட்டு எடுப்பார் என்று அவரும், அவர் பயணச்சீட்டு எடுப்பார் என்று இவரும் இருந்ததால், இருவரும் பயணச்சீட்டு எடுக்கவில்லை. 

அப்போது நடத்துனர் முனியாண்டி பேருந்தில் இருந்த பயணிகளை எண்ணிப்பார்த்தப் போது இரண்டு பேர் பயணச்சீட்டு எடுக்கவில்லை என்பது தெரிய வந்தது. அதனால் யார் அந்த இரண்டு பேர் என்று நடத்துனர் முனியாண்டி கேட்டு வந்ததோடு பயணச்சீட்டு எடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் யாரும் பயணச்சீட்டு எடுக்கவில்லை.

இந்நிலையில், மாரிமுத்து தாயும், மனைவியும் பயணச்சீட்டு எடுக்காமல் எலந்தப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். அப்போது நடத்துனர் முனியாண்டி நீங்கள் பயணச்சீட்டு எடுக்கவில்லைதானே பயணச்சீட்டு எடுங்கள் என்று கேட்டுள்ளார்.

அப்போது காந்தலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து தனது சகாக்களுடன் குடிபோதையில் அங்கு நின்றுள்ளார். தனது தாய் மற்றும் மனைவியை முனியாண்டி பயணச்சீட்டு எடுக்கச்சொல்லி வற்புறுத்துவதைப் பார்த்து மாரிமுத்தும் மற்றும் அவரது நண்பர்களும் அம்மாவையே டிக்கெட் எடுக்க சொல்வியா? நாங்க டிக்கெட் எடுக்க முடியாது என்று, நடத்துனர் முனியாண்டியிடம் தகறாறு செய்துள்ளனர். அதனை ஓட்டுநர் பழனிசாமி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

அப்படி வீடியோ எடுத்ததை பார்த்த மாரிமுத்து, எங்களையே நீ வீடியோ எடுக்கிறீயா? என்று ஓட்டுநர் பழனிசாமியிடம் தகறாறு செய்து அவரது செல்போனையும் பறித்து உடைத்ததோடு, அவரை தாக்கியும் உள்ளனர். அதனால் பேருந்தை அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று தப்பி ஓடி உள்ளனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து ஓட்டுநர் பழனிசாமி அடிப்பட்ட காயத்துடன் வந்து, பேருந்தை அங்கிருந்து எடுத்து கொண்டு தான் செல்ல வேண்டிய சூரியூரியூரில் நிறுத்தியுள்ளார். அவரை நடத்துனர் முனியாண்டி, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு ஓட்டுநர் பழனிசாமி சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் வேறு ஓட்டுநர் வைத்து சூரியூரில் இருந்து பேருந்தை எடுத்து வந்து துவாக்குடி பணிமனையில் நிறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி இன்று காலை துவாக்குடி அரசு போக்குவரத்து பணிமனை ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு தகவல் கிடைத்ததும் இச்சம்பவத்திற்கு நியாயம் கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனால் துவாக்குடி அரசு பணிமனையில் இருந்து அதிகாலை 4 மணியிலிருந்து வெளியில் செல்ல வேண்டிய பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.

இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் துவாக்குடி போலீசார் போராட்டம் நடத்திய துவாக்குடி அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் ஓட்டுநர் பழனிசாமியை தாக்கிய மாரிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் துவாக்குடி அரசு பணிமனையில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளையும் இயக்கமாட்டோம் என்று கூறியதோடு, இதுப்போல் கிராமபுறங்களில் பிரச்சனைகள் வருவதாகவும், அதனால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து புகார் கொடுங்கள், நாங்கள் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று போலீசார் உறுதியளித்ததின் பேரில், இன்று காலை 6 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரண்டு மணி நேரம் துவாக்குடி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply