சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவுபடி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மறுபிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடல்களை அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது.

Hon’ble Thiru. Justice S. Baskaran.

Hon’ble Thiru. Justice RMT. Teekaa Raman.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 7 பேரின் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில், மறுபிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வில் கடந்த வாரம் வழக்கு தொடரப்பட்டது.

இம்மனுக்கள் நீதிபதிகள் பாஸ்கரன் மற்றும் டீக்கா ராமன் ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணை நடைப்பெற்றது.

அப்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்களை எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும். உடற்கூறாய்வுக்கு பிறகு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதன்படி, ஜிப்மர் மருத்துமனையின் தடயவியல் மற்றும் நச்சியல் துறை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா, தூத்துக்குடி ஜே.எம்-1 கோர்ட் நீதிபதி அண்ணாமலை மற்றும் அரசு மருத்துவர்கள் 2 பேர் முன்னிலையில் மறு உடற்கூறாய்வு இன்று காலை தொடங்கப்பட்டு, உடல்களை அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. இதனால் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply