தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு எதிராக, டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் P.வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கடந்த ஆண்டு தமிழக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.
இவர்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் ப.தனபால் கடந்த 2017 செப்டம்பர் 18-ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து P.வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, ‘‘மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதியை காலியாக அறிவித்து தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது’’ என இடைக்காலத் தடை விதித்தார். மேலும், இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கும் பரிந்துரைத்து உத்தரவிட்டார்.
அதன்படி, இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், எழுத்துபூர்வமான இறுதி வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதையடுத்து கடந்த ஜனவரி 23-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அரசியல் தலைவர்கள் மத்தியிலும் இது மிகுந்த பரபரப்பையும், பதட்டத்தையும் இன்று உருவாக்கியது.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்தும் (நம்மை தவிர) அவரவர் கற்பனைக்கும், விருப்பத்திற்கும் ஏற்றவாறு தொடர்ந்து செய்திகளை வெளியிட்டனர்.
ஆனால், இந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் வழங்கிய தீர்ப்பு ‘நமத்துப் போன தீ குச்சியை உரசிய செயலாக ஒன்றுமில்லாமல் போய்விட்டது. ஆம், கை புண்ணுக்கு கண்ணாடி தேடும் கதையாக, இரண்டு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்பை வெளியிட்டு, மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு இந்த வழக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
இந்திய பிரதமரின் ஆதரவு இருக்கும் வரை எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி நிச்சயம் நீடிக்கும் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.
மேலும், 2019 மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகும் தருணத்தில், மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும். அதுவரை தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி நிச்சயம் நீடிக்கும்.
அதுவரை திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், இவர்களில் பெரும்பாலானோர் மறுபடியும் ஒரு தேர்தலை சந்திக்க தயாராக இல்லை. அதை அவர்கள் விரும்பவுமில்லை.
அதனால் ‘இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் நமக்கொரு கவலையில்லை’ என்ற மனநிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com