திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே ராதாபுரம் கிராமத்தில் நடுகல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் சிற்பம் 3½ அடி உயரம், 2½ அடி அகலத்தில், கற்பலகையில் புடைப்புச்சிற்பமாக வீரனது உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பத்தின் தலையில் வலதுபுறத்தில் கொண்டையும், காதுகளில் நீண்ட காதணியானது தோள்பட்டையை தொடும் வகையில் உள்ளது. முறுக்கு மீசையுடன், நெற்றியில் திலகமிட்டு, கண்களை உருட்டி அகோரப்பார்வையுடன் காட்சியளிக்கிறது. கழுத்தில் கழுத்தணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மார்பில் கவசமும், மேலாடையும் அணிவிக்கப்பட்டுள்ளது. இடுப்பில் கச்சையுடன் கூடிய குறுவாளும், இடது கையில் அலங்கரிக்கப்பட்ட கேடயத்துடனும் விளங்குகிறது. கால்களில் தண்டையுடன் கூடிய வீரக்கழல்கள் அணிந்து போர்ப்படை தளபதிக்குரிய தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.
இந்த சிற்பத்தை ஆராயும்போது இவ்வீரன் படைத்தலைவனாக கருதப்படுகிறது. இப்போர் வீரன் சிற்பம் அருகில் 3 அடி உயரம் கொண்ட சதிக்கல் அமைந்துள்ளது. இச்சதிக்கல் சிற்பத்தில் பெண் உருவத்துடன் இடுப்பில் வலதுபுறத்தில் கைக்குழந்தை பால் குடிப்பதை போன்ற குறியீட்டுடனும், இடதுபுறத்தில் பெண் குழந்தை நின்றவாறு தாயின் விரலை பிடித்தவாறும் இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
தாயின் விரலை பிடித்தவாறு இருக்கும் பெண் குழந்தையின் தலையில் நீண்ட முடியுடன் ஆடை அணிந்துள்ளவாறும், தாயுடன் நடந்து செல்வதுபோன்றும், கைகளில் வளையல், காதுகளில் காதணியுடனும் காணப்படுகிறது.
கி.பி.15-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிற்பம் போர்த்தளபதிக்கான சிற்பமாக காட்சியளிக்கிறது. இவ்வீரன் சிற்பத்தை ஒட்டியுள்ள சதிக்கல் சிற்பம் இதனுடன் இணைந்துள்ளதால் போரில் வீரமரணம் அடைந்த தளபதிக்கு நடுகல் எடுத்துள்ளதோடு அவனது மனைவி, குழந்தைகளுக்கும் சேர்த்து குடும்பத்துடன் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருவண்ணாமலை மாவட்ட அளவில் இந்த நடுகல் சிற்பம் சிறப்பானதாக கருதப்படுகிறது. இதுவரை கிடைத்துள்ள நடுகற்களில், விஜயநகர காலத்தை சேர்ந்த இச்சிற்பமானது குடும்பத்துடன் எடுக்கப்பட்ட நடுகல்லாக காட்சியளிக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நாத்தூரில் இருந்து சின்னகாங்கேயனூர் செல்லும் வழியின் வலதுபுறத்தில் உள்ள வீரனார் ஓடைக்கரையின் மேல் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு சதிக்கல்லுடன் கூடிய சிற்பங்கள் கி.பி.15-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயநகர காலத்தில் எழுப்பப்பட்டுள்ளது.
5 சிற்பங்கள் ஆண் வீரர்களும், 3 சிற்பங்கள் சதிக்கல்லாகிய பெண் உருவத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்கள் 5 தெற்கு நோக்கியும், 3 வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கிடைக்கும் இவ்வீரர்களின் நடுகல்லானது சதிக்கல்லோடு சேர்ந்து குழந்தையுடன் இருப்பதால் ஒரு பெரிய குடும்பத்துடன் போரில் இறந்துவிட்டவர்களுக்கு எடுக்கப்பட்டதாக இருக்கும் என்றும், இப்பகுதியில் வேறு எங்கும் இதுபோல் குடும்பத்துடன் போரில் இறந்தவர்களுக்கு நடுகல், சதிக்கல் எடுக்கப்படவில்லை என்றும், இந்த ஆய்வில் ஈடுபட்டு வரும் தொல்லியல் அறிஞர் சேகர், திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பிரேம்குமார் மற்றும் சுதாகர், சேது ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
– செங்கம் சரவணக்குமார்.