திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கீழ அம்பிகாபுரம், லூயிஸ் நகரில், செர்வைட் சமூக பணி மைய வளாகத்தில் சமுதாய கல்லூரியும், அனைவருக்கும் கல்வி இயக்கம் (Sarva Shiksha Abhiyan) சார்பில், இந்திய அரசியலமைப்பின் 86 ஆவது பிரிவின் படி 6 முதல் 14 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட ஏழைக் குழந்தைகளுக்கு உணவு மற்றும் விடுதி வசதியுடன் இலவச உண்டு, உறைவிட பள்ளியும் இயங்கி வருகிறது.
இந்த வளாகத்தில் சேரும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சேகரித்து அப்புறப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஒருவாரக் காலமாக குப்பைகளை அள்ள துப்புரவு பணியாளர்கள் அங்கு வரவில்லை. இது சம்மந்தமாக மேற்படி செர்வைட் சமூக பணி மைய நிர்வாகத்தின் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நேரிலும், அலைபேசி மூலமாகவும் தெரிவித்தனர். அதற்கு, இன்றைக்கு வருகிறோம், நாளைக்கு வருகிறோம் என்று கடந்த ஒரு வாரக்காலமாக ‘டிமிக்கி’ கொடுத்து வந்தனர். இதற்கிடையில் அங்குள்ள குப்பை தொட்டிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
இந்நிலையில், இத்தகவல் இன்று காலை நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்திற்கு வந்தது. இதை ஆசிரியர் கவனத்திற்கு தெரிவித்தோம்.
உடனடியாக திருச்சி மாநகராட்சி ஆணையரின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின் தகவல் தெரிவித்தார். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக திருச்சி மாநகராட்சி ஆணையரின் தனி உதவியாளர், நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின் அவர்களிடம் உறுதியளித்தார்.
அதன்படி சிறிது நேரத்தில் திருச்சி மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரிசுராமன் என்பவர், நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு, இன்று மாலைக்குள் லாரியுடன் சென்று மேற்படி குப்பைகளை அள்ளி தூய்மை செய்து விடுவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், துப்புரவு மேற்பார்வையாளர் ஒருவர், ஆசிரியர் டாக்டர் துரைபெஞ்சமின் அவர்களின் அலைபேசியில் தொடர்பு கொண்டு இனி இதுப்போன்ற குறைப்பாடுகள் வராது என்று உறுதியளித்தார்.
திருச்சி மாநகராட்சி ஆணையரின் தனி உதவியாளர் எடுத்த துரித நடவடிக்கையால் இன்று மாலை 4 மணியளவில் குப்பை லாரியுடன் மேற்படி செர்வைட் சமூக பணி மைய கல்வி வளாகத்திற்கு சென்ற துப்புரவு பணியாளர்கள் குழு, அங்கு ஒரு வாரக்காலமாக தேங்கிக் கிடந்த குப்பைகள் மற்றும் எச்சில் இலைகள் அனைத்தையும் லாரியில் அள்ளிச் சென்றனர்.
இனி நாங்கள் தினமும் வந்து குப்பைகளை எடுத்துச் செல்கின்றோம், எனவே, மேல் இடத்திற்கு எதுவும் புகார் செய்து விடாதீர்கள் என்று அன்பு கட்டளையிட்டு சென்றுள்ளனர். தற்போது அப்பகுதி தூய்மையாக உள்ளது.
எங்கள் தகவலை ஏற்று, துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
-கே.பி.சுகுமார்.