திருவாரூர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில் தெப்பத்திருவிழா 05.07.2018 அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
பஞ்ச பூத தலங்களுள் பூமிக்குரிய தலமாகவும், க்ஷேத்திரவரபுரம், ஆடகேசுரபுரம், தேவயாகபுரம், முசுகுந்தபுரம், கலிசெலா நகரம், அந்தர கேசுரபுரம், வன்மீக நாதபுரம், தேவசிரியபுரம், சமர்காரபுரம், மூலாதாரபுரம் என்றும் தேவார பாடல் பெற்ற தலங்களுள் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87 –வது சிவத்தலமாகவும் சப்த விடங்க தலங்களுள் தலைமை பீடமாகவும் விளங்ககூடிய திருக்கோவில் திருவாரூர் அருள் மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருகோவிலாகும். சைவ திருத்தலங்களில் பெரிய கோயில் என்பது திருவாரூர் தியாகராஜர் கோவிலைத்தான் குறிக்கும்.மூலவர் வன்மீகநாதர், புற்றிடம்கொண்டான் மற்றும் தியாகராஜர். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களுள் ஒன்றான இக்கோவிலின் தேர் ஆசியாவிலேயே மிகப்பெரியதேர் ஆகும். கடந்த 27.05.2017 அன்று தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோவில் 33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. மிக பிரம்மாண்டமான கோவிலின் பின்புறம் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது. குலமே கோயிலாக அமையப்பெற்ற பிரம்மாண்டமான இந்த கமலாலய குளமானது சிவபெருமான் யாகம் செய்த யாக குண்டமாக விளங்கியது. அந்த யாக குண்டத்திலிருந்து ஸ்ரீ லலிதாம்பிகை தோன்றியதும், ஸ்ரீ மகாலெட்சுமி தவம்புரியும் பெருமையுடையதும், இத்திருக்குளத்தில் நீராடுவோருக்கு பன்னிரு மகாமகத்தில் நீராடிய புண்ணியத்தை தரக்கூடியதும், அரிச்சந்திரன் தசரதன் போன்ற மன்னர்களும், ரிஷிகளும் சித்தர்களும் இந்திரன் போன்ற தேவர்களும் நீராடிய சிறப்பு பெற்றதும், சுந்தரமூர்த்தி நாயனார் மணிமுத்தாற்றில் போட்ட பொற்காசுகளை திருவாரூரில் மூழ்கி எடுத்ததுமாகிய இந்த திருக்குளத்தில் தியாகேச பெருமானே நீராடிய பெருமையுடையது. இவ்வளவு பெருமைக்குரிய கமலாலயம் திருக்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்று வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ விளம்பி ஆண்டு, ஆனி மாதம் 21- ம் தேதி வியாழன் கிழமை (05.07.2018 ) காலை அருள்மிகு பார்வதி கல்யாணசுந்தரர் துர்காலையா ரோட்டில் உள்ள தெப்ப திருநாள் மண்டபத்திற்கு பிரவேசம் செய்து பின் இரவு ஏழு மணியளவில் தெப்பத்திற்கு எழுந்தருளினார்.அதனை தொடர்ந்து மூன்று நாட்கள் 05.07.2018 வியாழன் முதல் 06.07.2018 வெள்ளிக்கிழமை மற்றும் 07.07.2018 சனிக்கிழமை வரை தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு கமலாலய திருக்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்று வருகிறது.. தெப்ப திருவிழா நடைபெறும் மூன்று நாட்களிலும் தெப்பத்தின் உள்ளே பிரபல இசை கலைஞர்களின் இன்னிசை கச்சேரி நடைபெருகிறது.
இந்த தெப்ப திருவிழாவின் ஏற்பாடுகளை தக்கார் மற்றும் உதவி ஆணையர் எஸ்.எஸ். பாலசுப்ரமணியன், பரம்பரை அறங்காவலர் உள்துறைக்கட்டளை ராம். வி. தியாகராஜன், செயல்அலுவலர் இ. ஆர். இராஜேந்திரன் மற்றும் திருகோயில் பணியாளர்கள் செய்திருகின்றனர். தெப்பத்திருவிழாவில் பல மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து கண்டுகளித்தனர்.
–ஜி. ரவிச்சந்திரன்.