தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்கள் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்து யாரோ குகைக்குள் சிக்கிக் கொண்டதை அறிந்துகொண்ட அதிகாரிகள், தாய்லாந்து அரசின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அவர்களைத் தேடும் பணி அன்றிரவே தொடங்கியது.
அவர்கள் உள்ளே சென்றிருந்த நிலையில், திடீரெனப் பெய்த பெருமழையும், அதையடுத்து குகைக்குள் பாய்ந்த காட்டு வெள்ளமும், குகையின் வெளியேறும் வாயில்களை அடைத்துக் கொண்டதால், இந்த 13 பேரும் ஒதுங்குவதற்கு சற்று மேடான இடத்தைத் தேடி குகைக்குள் சென்றதாகத் தெரிகிறது.
ஆனால், வெள்ளம் சூழ்ந்த, ஆழமான, சிக்கலான பாதைகளை உடைய அந்தக் குகையில் சிக்கிக்கொண்ட கால்பந்து அணியைக் கண்டுபிடிப்பது மீட்புக் குழுவினருக்கு மிகவும் சவாலாக இருந்தது.
இந்த விவகாரம் உலக நாடுகள் அனைத்தையும் கவலையில் ஆழ்த்தியது. பிரிட்டிஷ் குகை மீட்பு வல்லுநர்கள் உள்பட, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நீச்சல் வீரர்களும், குகை மீட்பு வீரர்களும் தாய்லாந்து நாட்டிற்கு விரைந்தனர்.
நீண்ட சிரமத்திற்கிடையில் 9 நாட்களுக்குப் பிறகு, ஜூலை 2-ம் தேதி பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் சிறுவர்களையும், அவர்களின் பயிற்சியாளரையும் குகை வாயிலில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறை இடுக்கில் உயிருடன் கண்டுபிடித்தனர்.
இந்த குகை அமைப்பு மலையின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் இருந்து சிறுவர்கள் சிக்கியுள்ள இடம் சுமார் 1 கி.மீ. ஆழத்தில் இருந்தது.
சிறுவர்களோடு பிரிட்டிஷ் குகை மீட்பு வீரர்கள் நிகழ்த்திய உரையாடல் அடங்கிய வீடியோ பதிவு ஒன்றும் வெளியானது. இது எல்லோருக்கும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்தது.
எனினும், குகையில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால், ஒன்று சிறுவர்கள் நீச்சல் கற்றுக்கொண்டு வெள்ளம் சூழ்ந்த குகையை நீந்திக் கடக்கவேண்டும், (அல்லது) வெள்ளம் வடியும் வரை குகையிலேயே காத்திருக்க வேண்டும் என்று தாய்லாந்து இராணுவம் அறிவித்தது.
இதனால் அச்சிறுவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்துப் போனார்கள். வெள்ளத்தில் சிக்கியுள்ள சிறுவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்களா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது.
ஒருபுறம் குகையில் இருந்த தண்ணீரை மோட்டார் வைத்து இறைக்குப் பணி மேற்கொள்ளப்பட்டது. மறுபுறம் குகையின் ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு உணவு, மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை சப்ளை செய்யும் பணியை தேர்ச்சி பெற்ற நீச்சல் வீரர்கள் மேற்கொண்டனர்.
இந்நிலையில், நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு 12 சிறுவர்களும், கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஒருவரும் மீட்பு குழுவினரால் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஆனால், இந்த மரணப் போராட்டத்தில் தாய்லாந்து கடற்படையின் தேர்ச்சி பெற்ற நீச்சல் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டரை கொடுத்து விட்டுத் திரும்பி வரும் வழியில், அவருக்கு ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் ஜூலை 6-ம் தேதி வீரமரணம் அடைந்தார் என்பதை நினைக்கும்போது உண்மையிலுமே நெஞ்சம் கனக்கிறது.
-ஆர்.மார்ஷல், எஸ்.சதிஸ் சர்மா.