திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே மலைக் கிராமங்களான கீழ்வலசை, மேல்வலசை, அக்கரப்பட்டு ஆகிய கிராமங்களில் பரம்பரை பரம்பரையாக நூற்றுக்கணக்கான பழங்குடி இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.
இதில் கீழ்வலசை கிராமத்தில் 358 மலைவாழ் மக்களும், மேல்வலசை கிராமத்தில் 198 மலைவாழ் மக்களும், அக்கரப்பட்டு கிராமத்தில் 190 மலைவாழ் மக்களும் வசித்து வருகிறார்கள்.
இந்த கிராமங்களில் கடுக்காய், சாமை, தினை, மரவள்ளி கிழங்கு, கேழ்வரகு, நெல், பலாப்பழம், நெல்லிக்காய், மக்காச்சோளம் ஆகியவற்றை விவசாயம் செய்து வருகின்றனர். இதில் சாமை, தினை, கடுக்காய், பலாப்பழம், நெல்லிக்காய், மக்காசோளம் ஆகியவற்றை தங்கள் தேவைக்கு வைத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை தங்கள் கிராமங்களுக்கு நேரடியாக வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.
கீழ்வலசை, மேல்வலசை, அக்கரப்பட்டு கிராம மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மலையின் கீழ் இருக்கும் முக்கிய நகரங்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்க வழிவகை ஏற்படும் என்ற அடிப்படையிலும், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, வேலை என பலவற்றுக்கு செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, உள்செக்கடி கிராமத்தில் இருந்து பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் சேர்ந்து கீழ்வலசை கிராமத்திற்கு 6 கிலோ மீட்டர் தூரம் மலைப்பாதையில் நடைபயணம் மேற்கொண்டு, சாலை வசதி ஏற்படுத்துவதற்கான வழிகளை ஆய்வு மேற்கொண்டார்.
உள்செக்கடி கிராமத்தில் 3 மலைக் கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்களின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, கீழ்வலசை கிராமத்திற்கு அழைத்து சென்றார்கள்.
உள்செக்கடி முதல் கீழ்வலசை வரை உள்ள மலைப்பாதையில் முதல் கட்டமாக வருவாய்த்துறை இடமான 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக சாலை அமைப்பதற்கு ரூ.29 லட்சம் நிர்வாக அனுமதி வழங்கி, முதற் கட்டப்பணிகள் தொடங்கப்படும்.
மேலும், மலைப்பாதையில் 4.6 கிலோ மீட்டர் வனத்துறை இடத்தில் சாலை அமைப்பதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்பட்டவுடன் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த சாலை அமைக்கப்படுவதால், தற்போது 90 கிலோ மீட்டர் சுற்றி வாகனங்களில் செல்வதற்கு பதிலாக, 25 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டால் அருகில் உள்ள முக்கிய நகரமான தானிப்பாடிக்கு வந்து சேரலாம். இதன்மூலம் மலைவாழ் மக்கள் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி செல்வதற்கும், வியாபாரம் செய்வதற்கும், தங்கள் பொருளாதார நிலையினை உயர்த்திக் கொள்வதற்கும் வழிவகை ஏற்படும்.
மேலும், அவர் கீழ்வலசை முதல் மேல்வலசை வரை 662 மீட்டர் தூரமும், கீழ்வலசை முதல் அக்கரப்பட்டு வரை 2 கிலோ மீட்டர் தூரமும் வருவாய்த்துறை இடத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக புதிய சாலை அமைப்பதற்கு திட்டம் தயாரிக்க கூறியுள்ளார். விரைவில் அறிக்கை கிடைத்தவுடன் அதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து கீழ்வலசை மற்றும் மேல்வலசை கிராமங்களில் நேரில் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மலைவாழ் மக்கள் கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சீரமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து உடனடியாக கிணற்றினை ஆழப்படுத்தியும், பலப்படுத்தியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சீரமைத்தும் மலை கிராமங்களுக்கு சீராக தண்ணீர் வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
முன்னதாக அரசு பழங்குடியினர் நல ஆரம்பப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது 3 பார்வையற்ற பழங்குடியின மலைவாழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார். மேலும், கீழ்வலசை கிராமத்தை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 14 வயது மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பராமரிப்பு செலவிற்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணையும், மூன்று சக்கர நாற்காலியும் வழங்கினார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மகளிர் திட்ட அலுவலர் ஜெயசுதா, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
– செங்கம் சரவணக்குமார்.