ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கை ஒருவரிடத்தில் திருடி, பிடுங்கி மற்றொருவருக்கு கொடுக்கும் முயற்சியாகும்: பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்

tn-cmf

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

மாநிலங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு குறியீட்டுக்கான டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டியின் அறிக்கை கடந்த மாதம் 26–ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை நான் மிகவும் கவனமுடன் படித்தேன்.

மத்திய – மாநில நிதி தொடர்புகளில் மத்திய நிதித்துறையின் அணுகுமுறை தவறான வகையில் இருப்பதை அறிந்து கவலை கொண்டேன். மத்திய – மாநில அரசுகள் வளங்களை பங்கீடு செய்வது சட்டப்படி நடந்து வருகிறது.

14–வது நிதிக்குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்ட நிலையில் பிறகு நிபுணர் குழுவை அமைப்பதன் மூலம் மத்திய நிதி மந்திரி, மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு நிதி மாற்றம் செய்வதில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டியின் அறிக்கை, மத்திய – மாநில அரசுகளின் நிதி தொடர்பான பல முக்கிய விஷயங்களை சுட்டிக் காட்ட தவறிவிட்டது.

அந்த அறிக்கையின் தொடக்கத்தில், மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு நிதி வழங்குவதன் முக்கிய நோக்கமே மாநிலங்களுக்கிடையே நிலவும் ஏற்றத் தாழ்வை களைவது தான் என்று கூறப்பட்டுள்ளது. இது தவறானது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நிர்வாக வசதிக்காக வரி விதிக்கவும், வரி வசூல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மற்றொரு பக்கத்தில் மாநில அரசுகள் போலீஸ், சட்டம் – ஒழுங்கை பராமரித்தல், நீதி நிர்வாகம், சுகாதாரம், கல்வி, வேளாண்மை, சாலை, குடி தண்ணீர் சப்ளை உள்பட பல்வேறு அத்தியாவசியப் பணிகளை செய்ய வேண்டியதுள்ளது.

எனவே கணிசமான நிதியை எல்லா மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஒதுக்க வேண்டியது அவசியம். ஆனால் டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டியின் அறிக்கையில் இந்த முக்கிய அம்சம் முழுமையாக விடுபட்டுள்ளது.

டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கையில் மாநிலங்களை சிறப்பு பிரிவு மற்றும் சிறப்பு அல்லாத பிரிவாக பிரித்து பரிந்துரைகள் செய்துள்ளனர். இதில் வரலாற்று பின்னணி முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பெரிய நிதி ஒதுக்கீடுகள் மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் வழியாக வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு திட்டத்தின் குறிப்பிட்ட வழிகாட்டுதல் படியே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.

இந்தியாவில் உள்ள 28 மாவட்டங்களில் வளர்ந்த மாநிலங்கள் வரிசையில் தமிழ் நாட்டுக்கு 3–வது இடத்தை டாக்டர் ரகுராம் ராஜனின் கமிட்டி வரையறுத்துள்ளது. இது தொடர்பான தகவலில் மாநிலத்தில் தேவை பற்றி மட்டுமே பிரதிபலிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை.

வறுமை விகிதம் ஒரு குறியீடாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வறுமை அளவு தொடர்பாக ஏற்கனவே பெரிய குழப்பமும், முரண்பாடான தகவல்களும், துல்லியம் இல்லாத நிலையே உள்ளது.

மேலும் இந்த புதிய வறுமை விகித அளவு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு கூட பயன்படுத்தப்படவில்லை.

அது போல பெண் கல்வி அளவும் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்– பெண் கல்வி இடைவெளி பற்றி கணக்கெடுத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

தாழ்த்தப்பட்ட, மலைவாழ் இன மக்கள் தொகை அளவை வைத்து மாநிலத்தின் பிற்ப்பட்ட அளவை எடுத்துள்ளனர். அதுவும் முழுமையானதாக இல்லை.

ஒரு மாநிலத்தில் உள்ள குடிசை வாழ் மக்களின் எண்ணிக்கையும் குறியீடாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது போல சில முக்கிய விஷயங்கள் விடுபட்டுள்ளன.

முக்கியமான ஒரு தனி மனிதருக்கு குடிப்பதற்கும், விவசாய தேவைக்கும் கிடைக்கும் தண்ணீர் பற்றி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அது புறக்கணிக்கப் பட்டுள்ளது. அது போல காற்று மாசு, தண்ணீர் மாசு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பற்றியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டி 2 விஷயங்களை அறிமுகப்படுத்தி பரிந்துரை செய்துள்ளது. ஒன்று மாநிலத்தின் மக்கள் தொகை அளவு. மற்றொன்று மாநிலத்தின் நிலப்பரப்பளவு.

ஆனால், கமிட்டி அறிக்கையில் எந்த ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படவில்லை. 2011–ம் ஆண்டு வைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பார்த்தால், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் பிறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற தேசிய குறிக்கோளுக்கு ஏற்ப குழந்தைகள் பிறப்பதை கணிசமாக குறைத்துள்ளது.

சமீப காலங்களில் எடுத்த மக்கள் தொகை அளவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப் படுவதாக இருந்தால் அது தமிழ் நாட்டை பாதிக்கும், குழந்தை பிறப்பை கட்டுப்படுத்ததாத மாநிலங்களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும். இது சரியான நடைமுறை அல்ல.

கணக்கு அடிப்படையில் ஒதுக்கீடு செய்வது சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பயன் அளிப்பதாக இருக்கும். மேலும் இது ஒருவரிடத்தில் திருடி, பிடுங்கி மற்றொருவருக்கு கொடுக்கும் முயற்சியாகும்.

டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கையின் பரிந்துரை, தேசிய மேம்பாட்டு மற்றும் தேசிய நலத் திட்டங்களை செம்மையாக செயல்படுத்தும் மாநிலங்களை பாதிப்பதாக உள்ளது. சிறு மாநிலங்களுக்கு 0.3 சதவீத பங்கு அளிக்கப்படுவதால் எந்த பிரச்சினையும் இல்லை.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக சொந்த முயற்சியில் முன்னேறி வரும் பெரிய மாநிலங்களுக்கு கமிட்டி அறிக்கை கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மத்திய அரசின் நிதி அளவு மிகவும் குறைந்து விட்டது.

பெரிய மாநிலங்கள் தாங்கள் சொந்த நிதி ஆதாரம் மூலம் நல்லாட்சி வழங்கி வருகின்றன. இத்தகைய மாநிலங்கள், டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டியின் பரிந்துரைகளால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கமிட்டியின் பரிந்துரை அமல் செய்யப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டுக்கு தனிநபர் விமான விகித அடிப்படையில் பாதி அளவே கிடைக்கும். சிறப்பு பிரிவில் இல்லாத மாநிலங்களுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீட்டில் 5-ல் ஒரு பங்குதான் கிடைக்கும். இது நியாயமற்றது.

சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது பெரிய தவறாகும்.

டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கை அவசரமாக தயாரித்து வெளியிடப் பட்டிருப்பதைப் பார்க்கும் போது அதில் அரசியல் நோக்கம் பின்னணியில் இருப்பது போல தோன்றுகிறது.

மாநிலங்களுக்கான பெரிய பெரிய மொத்த நிதி ஒதுக்கீடு, 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அமைக்கப்படும். நிதிக் கமிஷனின் பரிந்துரை அடிப்படையில்தான் இருக்க வேண்டியது அவசிய மாகும்.

அதை விடுத்து மத்திய நிதி மந்திரி ஒரு கமிட்டியை அமைத்து, உத்தரவிடுவது என்பது நிதிக் கமிஷனின் சட்டத்துக்குட்பட்ட நடவடிக்கையாக இருக்க முடியாது.

எனவே டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். அந்த அறிக்கை பரிந்துரைகளை எந்த வடிவத்திலும் அமல் படுத்தக் கூடாது.

வளர்ச்சி அடையாத மாநிலங்களுக்கு அதிக நிதி கொடுப்பதால் பயன் இல்லை. ஆகையால் 14–வது நிதிக்குழுவை சுதந்திரமாக செயல்பட விட வேண்டியது அவசியமாகும்.

14–வது நிதிக்குழுவின் பணியில் மத்திய நிதி அமைச்சரும், மத்திய நிதி அமைச்சகமும் குறுக்கிட முயற்சி செய்வதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

 pr021013_5271 copypr021013_527-12 copypr021013_527-23 copypr021013_527-34 copy