சங்கரராமன் கொலை வழக்கு: ஜெயேந்திரர், விஜயேந்திரர் கோர்ட்டில் ஆஜர்

sankararaman-murderJAYN - VIJYAகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இன்று (03.10.2013) வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 10 பேர் ஆஜரானார்கள். இதையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 5–ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதற்கிடையே கடந்த 02.08.2012–ல் சங்கரராமனின் மகன் ஆனந்த் சர்மா வழக்கின் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை தனக்கு வழங்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். இதற்கு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கதிரவன் சென்னை ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கதிரவன் கொலை செய்யப்பட்டார். இதனால் இந்த வழக்கு தள்ளுபடியானது. அதே நேரத்தில் ஆனந்த சர்மா தாக்கல் செய்த மனு புதுவை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 5–ந் தேதி வர உள்ளது. அன்றைய தினம் ஆனந்த் சர்மா கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். ஆனந்த் சர்மா மனுவை வாபஸ் பெறும் பட்சத்தில் நவம்பர் மாதம் 5–ந் தேதி தீர்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும்.