காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி காவிரி ஆற்றில் குளிக்கவோ, குதிக்கவோ கூடாது என்று ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இளைஞர்கள் சிலர் இதைப் பொருட்படுத்தாமல் ஆர்வக்கோளாறு காரணமாக ஆற்றில் குதிப்பதும், ஆபத்தை உணராமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு அலைபேசியில் படம் பிடிக்கவும் செய்கின்றனர். சில நேரங்களில் ஆற்றில் மூழ்கி இறக்கவும் செய்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருச்சி காவிரி பாலத்தில் ஆயிரக்கணக்கானப் பொது மக்கள் கரைபுரண்டு ஓடும் காவிரியை கண்டு மகிழ அதிகளவில் வருகின்றனர். இதனால் காவிரி பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் காவிரி பாலத்தை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், இளைஞர்கள் காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி காவிரி பாலத்திலிருந்து ஆற்றில் குதிக்கின்றனர்.
மேலும், கூட்ட நெரிசலை திருடர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு செயின் பறிப்பு, செல்போன் திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுப்படும் ஆபத்தும் உள்ளது.
எனவே, திருச்சி மாநகர காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரும் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினரும் விழிப்பாக இருந்து இப்பகுதியை கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், இங்கு பல விரும்பதகாத சம்பவங்கள் நடைபெறும் ஆபத்து உள்ளது.
-வீ.குணசேகரன்.