தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டை வீசிய பாரதீய ஜனதா பிரமுகர் !

ramanathanகோவை வடவள்ளி, சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 35) பாரதீய ஜனதா பிரமுகர். இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் கீழ் தளத்தில் வீட்டு உரிமையாளரும், மேல் தளத்தில் ராமநாதனும் வசித்து வந்தனர்.

கோவையில் உள்ள இந்து அமைப்பு பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து, ராமநாதனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் இளங்கோ என்பவர் நியமிக்கப்பட்டு 24 மணிநேர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே கடந்த 26-ந் தேதி இரவில் ராமநாதன் தங்கி இருக்கும் வீட்டின் மேல் பகுதியில் ‘டமார்’ என்ற சத்தத்துடன் ஏதோ ஒரு பொருள் வெடித்த சத்தம் கேட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ்காரர் சென்று பார்த்தபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் மற்றும் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவருடைய வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

நரேந்திர மோடி திருச்சி வருவதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு சிலர் போஸ்டர்களை ஒட்டியதால், அது தொடர்பாக ராமநாதன் போலீசில் புகார் செய்து இருந்தார். எனவே அவர்கள் ராமநாதன் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ராமநாதன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது,  தனக்கு கட்சியில் குறைந்துவிட்ட செல்வாக்கை அதிகரிக்க தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டை வீசியதை அவர் ஒப்புக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மதகலவரத்தை தூண்டுதல், மோசடி செய்தல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒரு பிரிவு ஜாமீனில் வெளியே வரமுடியாதது ஆகும். பின்னர் ராமநாதனை போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.