சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் மு.கருணாநிதி தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
அவரின் உடல் நலம் குறித்து தெரிந்து கொள்வதற்காக பல முக்கிய தலைவர்களும், மத்திய, மாநில அமைச்சர்களும், திரைப்படத்துறையைச் சார்ந்தவர்களும் மற்றும் முக்கிய பிரமுகர்களும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களாக வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும், காவேரி மருத்துவமனைக்குள் செல்ல முடியாத ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைச் சார்ந்த செய்தியாளர்களும், கேமராமேன்களும் இரவு, பகல் எந்நேரமும் காவேரி மருத்துவமனையின் முன்பு குவிந்துள்ளனர்.
இந்த கூட்டத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருட்டு கும்பல், பல குழுக்களாக பிரிந்து, காவேரி மருத்துவமனை வளாக பகுதிகளில் காத்திருந்த நபர்களிடம் பணம், செல்போன் மற்றும் தங்கச் சங்கிலி…இப்படி பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து வந்துள்ளனர்.
தகவலறிந்த மைலாப்பூர் காவல்நிலைய ஆய்வாளர் செந்தில் முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார், திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்ட 10- க்கும் மேற்பட்ட நபர்களை சுற்றி வளைத்து கூண்டோடு கைது செய்து வழக்கு பதிவு (Cr.No: 478/2018, 479/2018 ,480/2018) செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மாநாடு, திருவிழா, பிரபலங்களின் மரணம் மற்றும் இறுதி ஊர்வலம்… இப்படி எங்கெல்லாம் கூட்டம் கூடுகிறதோ, அங்கெல்லாம் சென்று ஒன்றாக சேர்ந்து திருடுவதை தொழிலாகக் கொண்டவர்கள் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மனச்சாட்சி இல்லாத மனித மிருகங்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது எல்லோருக்கும் நல்லது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com