வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் போகிறிர்களா? தகவல் தெரிவித்தால் போதும் சிசிடிவி கேமரா தங்கள் வீடு தேடி வரும்!-குற்றச் சம்பவங்களை தடுக்க திருவெறும்பூர் காவல்துறையினரின் அசத்தல் திட்டம்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு, வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் நபர்களின் வீடுகளில் கொள்ளை… இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி இழந்து உள்ளனர்.

எனவே, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணித்தால் மட்டுமே, குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும் என்று, நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் தொடர்ந்து பலமுறை செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில், குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பது எப்படி? அதற்கு பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன, என்ன? என்பது குறித்து, திருவெறும்பூர் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் இன்று (04.08.2018) நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

இனி யாராவது குடும்பத்துடன் வெளியூர் செல்வதாக இருந்தால், திருவெறும்பூர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தால் போதும், சிசிடிவி கேமரா (Closed Circuit Television-CCTV) தங்கள் வீடு தேடி வரும். நீங்கள் மறுபடியும் வீடு திரும்பும் வரை தங்கள் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி எந்த குற்றச் சம்பவங்களும் நடைப்பெறாமல் திருவெறும்பூர் காவல்துறையினர் கண்காணித்துக்கொள்வார்கள். இதற்கென்றே அதிக எண்ணிக்கையிலான சிசிடிவி கேமராக்களை திருவெறும்பூர் காவல்துறையினர் தங்கள் கை வசம் வாங்கி வைத்துள்ளனர்.

76398 00100 என்ற வாட்ஸ் சப் எண்ணிற்கு தகவல் தெரிவித்து விட்டு, இனி நிம்மதியாக நீங்கள் குடும்பத்துடன் வெளியூர் செல்லலாங்க. 

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? நாங்க இங்கு சொல்லியிருப்பது அனைத்தும் உண்மைங்க.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply