ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்பட16 பேருக்கு மகாராஷ்டிர நீதிமன்றம் பிடிவாரண்ட்!-உத்தரவின் உண்மை நகல்.

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்பட 16 பேருக்கு, மகாராஷ்டிர தர்மதாபாத் முதன்மை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நான்ந்டெட் பகுதியில் கோதாவரி ஆற்றின் குறுக்கே, கடந்த 2010-ஆம் ஆண்டு ‘பாப்ஸி’ என்ற அணையைக் கட்ட அம்மாநில அரசு முடிவு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால், இந்த அணைக் கட்டினால் ஆந்திர மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறி, அணையை முற்றுகையிடப்போவதாக அப்போது ஒருங்கிணைந்த ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து மகாராஷ்டிரா மாநில அரசு அப்பகுதியில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது. இந்நிலையில் தடையை மீறி மகாராஷ்டிராவில் நுழைய முயன்ற சந்திரபாபு நாயுடு உள்பட 30 சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தர்மதாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக சந்திரபாபு நாயுடுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், ஒருமுறை கூட அவர் ஆஜராகாததால், சந்திரபாபு நாயுடு உள்பட 16 பேர்களையும் இம்மாதம் 21-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி தர்மதாபாத் காவல் நிலைய ஆய்வாளருக்கு, தர்மதாபாத் முதன்மை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply