மதுரை மாநகர காவல்துறை மற்றும் அனைத்துக் கல்லூரி போதை ஒழிப்பு குழுக்கள் சார்பாக, அழகர் கோவில் சாலையில் உள்ள மதுரை காமராசர் பல்கலைகழக சுற்றுச் சுவரில் “உன் வாழ்க்கை, உன்கையில்” என்ற தலைப்பில், சுவர் ஓவியப் போட்டி அக்டோபர் 1-ந்தேதி நடத்தப்பட்டது.
இந்த ஓவியப் போட்டியை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் துவக்கி வைத்தார். இப்போட்டியில் 60- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் நடுவராக ‘தி ஹிந்து’ பத்திரிகை துணை ஆசிரியர் சு.ராஜேஷ் நியமிக்கப்பட்டார். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுத் தொகையை வடமலையான் மருத்துவமனை இயக்குநர் Dr.புகழேந்தி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த மதுரை இரத்தத்தான குழுவின் நிர்வாகி N.சர்மிளா மற்றும் போட்டிக்கான முன்னேற்பாடுகளை செய்து கொடுத்த “வா நண்பா” தன்னார்வக் குழுவினரையும், மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.
இந்த சுவர் ஓவியப் போட்டியில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் முதலிடத்தை பிடித்து ரூ.5000/- பரிசாக பெற்றனர். மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி மாணவ, மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்து ரூ.3000/- பரிசாக பெற்றனர். மதுரை லேடி பெருமாட்டிக் கல்லூரி மாணவ, மாணவிகள் மூன்றாம் இடத்தை பிடித்து ரூ.2000/- பரிசாக பெற்றனர்.
வெற்றிபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மேலும், மதுரை மாநகரை போதை பொருட்கள் இல்லா நகரமாக மாற்ற கல்லூரி மாணவர்கள் அனைவரும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
-ஆர்.மார்ஷல்.