சென்னை, ஆவடி பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற குற்றவாளியை கைது செய்ய உதவிய பெண்மணியை, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை, டி-7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் Tata Indicash நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் இயந்திரம் உள்ளது.
கடந்த 01.11.2018 அன்று அதிகாலை மேற்படி ஏ.டி.எம் சென்டருக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், ஸ்குரு டிரைவரால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார்.
இதனை கண்ட ஏ.டி.எம் சென்டரின் எதிரே உள்ள வீட்டில் வாடகைக்கு வசிக்கும் சுமதி (வயது55) க/பெ.கண்ணன் என்ற பெண்மணி சுதாரித்து கொண்டு, தனது மகன் செந்தில் மற்றும் வீட்டின் உரிமையாளர் சம்பத்திடம் கூறியுள்ளார்.
சுமதியின் மகன் செந்தில் மற்றும் வீட்டின் உரிமையாளர் சம்பத் ஆகிய இருவரும் விரைந்து சென்று, மேற்படி வாலிபரை பிடிக்க முற்பட்ட போது, அவன் கத்தியைக்காட்டி மிரட்டியுள்ளான்.
உடனே சுதாரித்துக் கொண்ட செந்தில் மற்றும் சம்பத் ஆகிய இருவரும், ஏ.டி.எம் இயந்திரத்தின் ஷட்டர் கதவை மூடிவிட்டு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல் கட்டுப்பாட்டு அறை போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து வாகனத்தில் பணியிலிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தவுடன், ரோந்து போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று, ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற நபரை கைது செய்து டி-7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
டி-7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய போலீசாரின் விசாரணையில் பிடிப்பட்ட வாலிபர் பெயர் தீர்த்தமலை(வயது35) த/பெ.வீரமணி என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட தீர்த்தமலை, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி சம்பவத்தில் விழிப்புடன் செயல்பட்டு, குற்றவாளியை கைது செய்ய உதவிய பெண்மணி சுமதி என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
-எஸ்.திவ்யா.