திருச்சியில் நடைப்பெற்று வரும் விடுதலை சிறுத்தைகளின் ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விபரம்!
1. வீரவணக்கம்!
இந்திய அரசியல் களத்தில் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்திய பெருமைக்குரியவர் மறைந்த முன்னாள் முதல்வர் சமத்துவப் பெரியார் தலைவர் கலைஞர் அவர்கள். குறிப்பாக, சமூகநீதிக்களத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானவை.
அதாவது, கலப்புத் திருமணங்களை ஊக்குவிப்பதற்கான திட்டம், பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் அருகருகே குடியிருப்பதற்கான சமத்துவபுரம் திட்டம், தகுதி அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான சட்டம் முதலானவற்றை செயல்படுத்தியதன் மூலம் சனாதனத்தின் அடிப்படைகளைத் தகர்த்து, சனநாயகத்தை விரிவுபடுத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
“மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி”என்னும் கொள்கையின் மூலம் இந்தியா ஒரு மெய்யான குடியரசாக மலர்வதற்குப் பாதை அமைத்தவர். அவர்,ஆற்றல் மிக்க அரசியல் தலைவராக மட்டுமின்றி துணிச்சல்மிக்க சமூக மாற்றத்துக்கான செயல் வீரராகவும் திகழ்ந்தவர். அன்னைத் தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரத்தை வென்றெடுத்து உலகப் பரப்பில் தமிழின் சிறப்பை நிலைநாட்டியவர். அத்தகைய பேராளுமை வாய்ந்த தலைவருக்கு இம்மாநாடு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
அடுத்து, தமிழ் மொழிக்காக, தமிழ் மக்களுக்காக நீண்டகாலம் பாடாற்றி நம் நினைவில் என்றென்றும் நிலைகொண்டிருக்கிற-அண்மையில் மறைந்த தோழர்களான ஊடகவியலாளர் ஞாநி, எழுத்தாளர் பிரபஞ்சன், தமிழறிஞர்கள் அ.அ.மணவாளன், க.ப.அறவாணன் மற்றும் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் ஆகியோருக்கும் இம்மாநாடு தமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
அத்துடன், அண்மையில் டெல்டா மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயல் என்னும் இயற்கைப் பேரிடரில் உயிரிழந்த பொதுமக்களுக்கும், சாதி ஆணவப் படுகொலைகளில் பலியானவர்களுக்கும் இம்மாநாடு வீமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.”
- அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசத்தைப் பாதுகாப்போம்
ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலையடைந்த போது இதனை ‘இந்து நாடு’ என அறிவிக்க வேண்டுமென்றும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காவிக் கொடியை , தேசியக் கொடியாக ஏற்க வேண்டும் என்றும் என சனாதன பழமைவாதிகள் முயற்சித்தனர். ஆனால் அவர்களது பெரும்பான்மை வகுப்புவாத சனாதன அரசியல் நோக்கத்தை முறியடித்து, இந்தியாவை ஒரு ஜனநாயகக் குடியரசாக கட்டமைத்து வருவது புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டமேயாகும். சனநாயகம், சமத்துவம் போன்ற முற்போக்கு சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத தீனதயாள் உபாத்யாயா போன்ற ஆர்.எஸ்.எஸ் சனாதனிகள், ‘அரசியலமைப்புச் சட்டத்தைக் கிழித்தெறிய வேண்டும்’ என அப்போதே கூச்சலிட்டனர். அவரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசு, பதவியேற்ற நாளிலிருந்தே அரசியலமைப்புச் சட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கச் செய்துவருகிறது.
மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், பணமதிப்பு நீக்க மசோதா, ஆதார் மசோதா முதலான அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்களை, பண மசோதா என்ற பெயரில் குறுக்கு வழியில் நிறைவேற்றியும்: அரசியலமைப்புச் சட்ட அமைப்புகளான ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், சிபிஐ முதலானவற்றின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் அவற்றில் தலையிட்டும் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இந்திய சனநாயகத்துக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜனநாயக குடியரசைக் கட்டமைக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை அடியோடு மாற்றுவதற்காக திரு.வாஜ்பாயி அவர்களின் ஆட்சிக் காலத்தில், நீதியரசர் வெங்கடாசலையா ஆணையத்தை அமைத்தது பாஜக அரசு. அதேபோல, தற்போது ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான கோவிந்தாச்சார்யா தலைமையில் குழு ஒன்றை அமைத்து, இந்துத்துவ –சனாதன அரசியலமைப்புச் சட்டம் ஒன்றைத் தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையைத் தகர்ப்பதற்கான முன்னோட்டமாகவே முத்தலாக் மசோதாவையும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவையும் பாஜக அரசு சட்டமாக்கியிருப்பது ஆர்.எஸ்.எஸ்-சின் சூழ்ச்சியாகும்.
சனாதனம் என்னும் மனுதர்மத்தையே மீண்டும் இம்மண்ணை ஆளும் அதிகாரப்பூர்வமான அரசமைப்புச் சட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதும் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டுமென்பதுமே ஆர்எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் மற்றும் அவற்றின் அரசியல் முகமான பாஜக ஆகியவற்றின் முதன்மையான நோக்கமாகும். அதனடிப்படையில் தான் ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்னும் செயல் திட்டங்களின் மூலம் இன்றைய அரசமைப்புச் சட்டத்தை சிதைப்பதற்கான சதி முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் அது கட்டமைத்து வரும் ஜனநாயகத்திற்கும் அதனடிப்படையில் ஜனநாயக குடியரசாக மலர்ந்துவரும் புதிய இந்திய தேசத்துக்கும் பேராபத்து சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், சனாதன தேசம் என்கிற நிலையிலிருந்து மாறி, படிப்படியாக இந்தியா ஒரு சனநாயக தேசமாக பரிணாமம் பெறுவது தொடரவேண்டுமெனில், தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது இன்றைய தவிர்க்க முடியாத தேவை என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுவதோடு, அனைத்து மதச்சார்பற்ற –ஜனநாயக சக்திகளும் அரசியல் களத்தில் ஒருங்கிணைந்து, சனாதன சக்திகளின் அனைத்து சதிமுயற்சிகளையும் முறியடிப்போம் என இம்மாநாடு உறுதியேற்கிறது.
- சமூகநீதியைப் பாதுகாப்போம்
முற்பட்ட சமூகப் பிரிவினரில் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீட்டை அளிக்கும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியுள்ளது. இது உண்மையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தை கொண்டதல்ல, மாறாக ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சமூகநீதி கோட்பாட்டின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை ஒழித்துக்கட்டுவதற்கான சதித்திட்டமே ஆகும்.
இடஒதுக்கீடு என்பது வெறுமென பொருளாதார அடிப்படையில் ஏழைகள் என்பதற்காக வழங்கப்படுவதல்ல, பலநூறு ஆண்டுகளாக நிலவி வரும் சமூக இழிவுகள் மற்றும் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் பெறுவதற்கான ஜனநாயக நோக்கில் வழங்கப்படுவதாகும். இதை உச்சநீதிமன்றம் இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பு உட்பட பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியிருக்கிறது. எனினும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிராக இந்தபொருளாதார அடிப்படையிலான இந்த இடஒதுக்கீடு சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு மாறாக புதிய சட்டமோ, சட்டத் திருத்தமோ செய்யப்படக்கூடாது என உச்சநீதிமன்றம் உறுதியான தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்றான சமத்துவத்துக்கு எதிராக இந்த சட்டம் அமைந்துள்ளது. பொதுநீதிக்கும், சமூகநீதிக்கும் எதிரான இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி மக்களுக்கான இடஒதுக்கீட்டைக் கொஞ்சம்கொஞ்சமாக சிதைத்து வருகிறது. இடஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம் என வெளிப்படையாகக் கூறாமலேயே அதை முடக்கிக் கொண்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டுக்குப் பொருளாதார அளவுகோலை திணிப்பதன்மூலம் சமூகநீதி என்னும் இடஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்க்க முற்பட்டிருக்கிறது.
கல்வியையும், அரசு நிர்வாகத்தையும் முன்னேறிய சாதிமயமாக்கிச் சனாதனத்தை மென்மேலும் வலுப்படுத்துவதற்காகவே பாஜக அரசு நிறைவேற்றியுள்ள பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்வதற்கு நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
- வகுப்புவாத வன்முறைத் தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்
மதத்தின் பெயரால் பெரும்பான்மைவாதத்தின் பெயரால் திட்டமிட்டு தூண்டப்படும் வகுப்புவாத வன்முறைகளைத் தடுப்பதற்காகவும்; வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவும் ; வகுப்புவாத வன்முறை நிகழப்போவது தெரிந்திருந்தும் அதைத் தடுக்காமல் தனது கடமையைச் செய்யத் தவறும் அரசு அதிகாரிகள்மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில், “குறிவைத்து ஏவப்படும் வன்முறைகள் மற்றும் வகுப்புவாத வன்முறைகள் தடுப்பு மசோதா” (PREVENTION OF COMMUNAL AND TARGETED VIOLENCE (ACCESS TO JUSTICE AND REPARATIONS) BILL, 2011) உருவாக்கப்பட்டது. குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்ததுபோல மாநில அரசே வகுப்புக் கலவரத்தைத் தூண்டும் நிலை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதை முதன்மையான நோக்கமாகக் கொண்ட அந்த மசோதாவை பாராளுமன்றத்தில் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான அரசு நிறைவேற்ற முயற்சித்தபோது அதை பாஜகவும் அதன் ஆதரவு கட்சிகளும் எதிர்த்தன. அதிமுகவும் அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் அந்த மசோதா சட்ட வடிவம் பெற முடியவில்லை.
வெறுப்புப் பிரச்சாரத்தையோ, வெறுப்புக் குற்றங்களையோ தடுப்பதற்கென்று சிறப்புச் சட்டம் எதுவும் இந்தியாவில் இல்லை. அதனால்தான் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் காவல்துறைக்கும் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, ” குறிவைத்து ஏவப்படும் வன்முறைகள் மற்றும் வகுப்புவாத வன்முறைகள் தடுப்பு சட்டத்தை உடனடியாக இயற்றுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- ஆணவக் கொலைகள் தடுப்பச் சட்டம் இயற்ற வேண்டும்
ஆணவக் கொலைகளைத் தடுப்பது தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் 27.03.2018 அன்று வழங்கியது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர், நீதிபதி டி.ஒய்.சந்த்ரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய அந்தத் தீர்ப்பு, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு மத்திய அரசு சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றவேண்டும் என ஆணையிட்டிருப்பதோடு, அவ்வாறு சட்டம் இயற்றும்வரை மத்திய மாநில அரசுகள் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பட்டியலிட்டிருந்தது.
அந்த நெறிமுறைகள் இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வழக்குகளுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது. அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கண்டிப்போடு உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு எப்போதோ முடிந்துவிட்டது. ஆனால், இதுவரை தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் அடிக்கடி ஆணவக் கொலைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.
உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க மத்திய அரசு ஆணவக் கொலை குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் ஒன்றை உடனே இயற்ற வேண்டுமெனவும், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை இனியும் காலந்தாழ்த்தாமல் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- சபரிமலை தீர்ப்பை ஆதரிப்போம்
பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலையில் வழிபடலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கியது. பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதும் தீண்டாமையே என அந்தத் தீர்ப்பில் தெளிவுபடுத்தியது. அந்தத் தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் சனாதனவாதிகள் தடுத்து வருகின்றனர். அந்த சனாதனப் போக்கை நியாயப்படுத்தும் விதமாக ” அது பாரம்பரியம் தொடர்பான பிரச்சனை ” என்று பிரதமர் நரேந்திர மோடியும் கருத்து தெரிவித்திருக்கிறார். முறையாக விரதமிருந்து அங்கு வழிபடச் சென்ற பெண்களைச் சனாதன கும்பல் அடித்து விரட்டி வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைபடுத்தவிடாமல் மத்தியில் ஆளுங்கட்சியே வன்முறையில் ஈடுபடும் அவலமான சூழலை இந்த நாடு பார்த்துவருகிறது.
உச்சநீதிமன்றம் உறுதிசெய்த தமது உரிமையை நிலைநாட்ட பெண்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். அந்தப் போராட்டத்தின் விளைவாக இரண்டு பெண்கள் அங்கு சென்று தமது வழிபாட்டு உரிமையை நிலைநாட்டியுள்ளனர். சனாதன வெறியர்களின் அச்சுறுத்தல்களைப் புறந்தள்ளி சமத்துவ உரிமையை நிலைநாட்டிய பிந்து, கனகதுர்கா ஆகிய பெண்மணிகளை இம்மாநாடு வாழ்த்தி பாராட்டுகிறது. அவர்கள் மட்டுமின்றி ஏற்கனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி 51 பெண்கள் சபரிமலையில் வழிபாடு செய்திருப்பதாக கேரள அரசு தெரிவித்திருக்கிறது. அவர்கள் வழிபடுவதற்கு உரிய பாதுகாப்பை வழங்கி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்திய மாண்புமிகு முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசையும் இம்மாநாடு பாராட்டுகிறது.
அத்துடன் பாலின சமத்துவத்தை நிலை நாட்டும் வகையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பை வரவேற்று ஆதரிக்க வேண்டுமென அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் இம்மாநாடு வேண்டுகோள்விடுக்கிறது.
- சனாதன் சன்ஸ்தாவைத் தடை செய்ய வேண்டும்
மகராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இடதுசாரி தலைவர் கோவிந்த் பன்சாரே, பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் ஆகிய நால்வரது கொலைகளுக்கும் சனாதன் சன்ஸ்தா என்ற பயங்கரவாத அமைப்புதான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயங்கரவாத அமைப்பில் இடம்பெற்றுள்ளனரென்றும் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது என்றும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தப் படுகொலைகளைச் செய்த முதன்மைக் குற்றவாளியாக மகராஷ்டிர மாநிலம் பூனாவைச் சேர்ந்த சனாதன பயங்கரவாதி அமோல் காலே என்பவரைக் கர்நாடக மாநில சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ‘டைரி’யில் மேலும் கொலை செய்யப்படவேண்டியவர்கள் எனக் குறித்து வைக்கப்பட்டிருந்த 34 பேரின் பட்டியல் கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரின் பெயர் இடம்பெற்றுள்ளதாக கர்நாடக மாநில சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர்.
சனாதன் சன்ஸ்தா கோவாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பாகும். கர்நாடகா, மகராஷ்டிரா, ஆகிய மாநிலங்களிலும் அது குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது அம்பலமாகியிருக்கிறது. அந்தப் பயங்கரவாத அமைப்பு தமிழ்நாட்டிலும் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது.
கர்நாடக, மகராஷ்டிர மாநிலங்களின் புலனாய்வு அமைப்புகளால் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சனாதன் சன்ஸ்தாவைத் தடை செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- மனித உரிமை செயற்பாடாளர்கள் மீதான ஒடுக்குமுறைகளை கைவிட வேண்டும்!
1818 ஆம் ஆண்டு ‘பீமா கோரேகான்’ என்னுமிடத்தில் மஹர் சாதியினர் இடம்பெற்ற பிரிட்டிஷ் படையானது , பேஷ்வாக்களின் படையை வெற்றிகொண்ட யுத்தத்தின் 200 ஆவது ஆண்டை நினைவுகூர்ந்திட புனேவுக்கு அருகிலுள்ள ஷனிவார் வாடா என்னுமிடத்தில் 2017 டிசம்பர் 31 ஆம் தேதி ’எல்கார் பரிஷத்’ என்ற பெயரில் விழா ஒன்று நடைபெற்றது. அதில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் சமூக இயக்கங்களும் பங்கெடுத்தன.
2018 ஜனவரி 1 ஆம் நாள் பீமா கோரேகான் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கூடுவதைப்போல லட்சக்கணக்கில் தலித் மக்கள் கூடினார்கள். அவ்வாறு கூடிய தலித்துகள் மீது சனாதனக் கும்பல் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து தலித்துகள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அதனால் ஆத்திரமுற்ற பாஜக அரசு ’எல்கார் பரிஷத்’ விழாவை நடத்தியவர்கள் ’நகர்ப்புற நக்ஸலைட்டுகள்’ என முத்திரை குத்தி அந்த விழாவுக்குக் கொஞ்சமும் தொடர்பே இல்லாத மனித உரிமை செயற்பாட்டாளர்களை, ’சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் கைதுசெய்து சிறைப்படுத்தி வருகிறது. இப்போது அந்த வழக்கில் உலகறிந்த தலித் சிந்தனையாளரும் கல்வியாளருமான ஆனந்த் டெல்டும்டேவைக் கைதுசெய்ய முயற்சித்து வருகிறது. பாஜக அரசின் இந்த தலித் விரோதப் போக்கை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அவர்மீதான பொய் வழக்கை ரத்துசெய்யுமாறு மகராஷ்டிர அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
2016 ஆம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் தேசவிரோத முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக குற்றம் சுமத்தி, மாணவர் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்ட பத்து மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்கை டெல்லி போலீஸ் பதிவு செய்துள்ளது. மூன்று ஆண்டுகள் கழித்து இப்போது அதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாஜகவின் மாணவர் அமைப்பான ‘ஏ.பி.வி.பி’யைச் சேர்ந்தவர்கள்தான் அந்த கூட்டத்தில் புகுந்து வேண்டுமென்றே முழக்கமிட்டதாக 2016ல் ‘ஏ.பி.வி.பி’யின் பொறுப்பாளர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவின் தூண்டுதலால்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னையா குமார் உள்ளிட்ட மாணவர்கள்மீது பதியப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை ரத்து செய்யவேண்டுமென டெல்லி காவல்துறையை இம்மாநாடு வலியுறுத்துகிறது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு பொறுப்பேற்கும் மதச்சார்பற்ற அரசு தேசத் துரோக சட்டப் பிரிவான 124ஏ வை ரத்துசெய்யவேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
- காவிரி உரிமையைக் காப்போம்
காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் காவிரியின் குறுக்கே புதிய அணைகள் ஏதும் கட்டப்படக்கூடாது என்றும் அவ்வாறு கட்டுவதாக இருந்தால் தமிழ்நாட்டின் ஒப்புதலை கர்நாடக அரசு பெறவேண்டும் என்றும் தெளிவாகக் கூறியுள்ளன.
உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதித்து கருத்தொற்றுமை ஏற்பட்டாலன்றி எந்த ஒரு மாநிலமும் காவிரியின் குறுக்கே அணையைக் கட்ட முடியாது. இத்தகைய நிலையில் மேகதாதுவில் 66 டிஎம்சி தண்ணீரைத் தேக்குவதற்கு சுமார் 6000கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை ஒன்றைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. சட்டவிரோதமான இம்முடிவுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய நீர் ஆணையமும் ஒப்புதலை வழங்கியிருக்கிறது. அத்துடன் மத்திய அரசும் அதற்கு ரூபாய் 2000கோடி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளது. இது அப்பட்டமான தமிழக விரோத நடவடிக்கை ஆகும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் காவிரி மேலாண்மை ஆணையத்தையும் கர்நாடக அரசு மதிக்காததில் வியப்பேதும் இல்லை. ஆனால், இதுவரை காவிரிப் பிரச்சனையில் நடுநிலை வகிப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்த மத்திய அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கொஞ்சமும் மதிக்காமல் வெளிப்படையாகவே கர்நாடகாவுக்கு ஆதரவளிப்பது அதிர்ச்சி தருகிறது.தமிழக நலன்களுக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியைக் கைவிடவேண்டுமென கர்நாடக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
விரிவான திட்டமதிப்பீடு தயாரிப்பதற்கான அனுமதியை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் கர்நாடக அரசு தமது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- அணை பாதுகாப்பு மசோதாவைக் கைவிட வேண்டும்
மத்தியில் ஆளும் பாஜக அரசு அணைகள் பாதுகாப்பு மசோதா ஒன்றை உருவாக்கியுள்ளது. அதற்கு அமைச்சரவையில் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமானால் இந்தியாவில் உள்ள அணைகள் யாவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். இது மாநில உரிமைகளைப் பறிப்பதாகும்.
இந்தியாவில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய அணைகள் உள்ளன, பல்லாயிரக்கணக்கில் சிறிய மற்றும் நடுத்தர அணைகள் உள்ளன. இந்த அணைகள் யாவும் மாநில அரசுகளால் கட்டப்பட்டு பராமரிக்கப்படுபவையாகும். அணைகளை மத்திய அரசு பாதுகாக்கும் என்று ஆக்குவதன் மூலம் மாநில பட்டியலில் உள்ள அதிகாரத்தை மத்திய அரசின் பட்டியலுக்கு கொண்டு செல்ல மோடி அரசு முயற்சிக்கிறது.
மாநிலப் பட்டியலில் உள்ள எந்த ஒரு அதிகாரத்தையும் பொதுப் பட்டியலுக்கு நேரடியாகவோ மறைமுகமாவோ மாற்றக்கூடாது எனவும், அணை பாதுகாப்பு மசோதாவை உடனடியாகக் கைவிடவேண்டும் எனவும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
- கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்த்திட வேண்டும்
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால்தான் மத்தியில் ஆளும் பாஜக அரசு சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பாஜக ஆட்சியில் கல்வி சனாதனமயமாக்கப்படுகிறது, கல்வி நிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் சனாதன மையங்களாக மாற்றப்படுகின்றன.
கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால்தான் நீட் நுழைவுத் தேர்வு நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதுதான் இதற்கு நிரந்தரமான தீர்வாக இருக்கும்.
முன்னேறிய வகுப்பினருக்கே கல்வி என்னும் சனாதன தர்மத்தை நிலைநாட்டுகிற நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யவேண்டும் எனவும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும் எனவும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- அந்தரங்கம் என்னும் அடிப்படை உரிமையைப் பறிக்கும் ஆணையைத் திரும்பப் பெற வேண்டும்
இந்திய குடிமக்கள் எவருடைய தனிப்பட்ட கைபேசி, கணிணி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை வேவு பார்க்கவும், ஆராயவும்; குடிமக்களின் தனிப்பட்ட மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் முதலானவற்றை கண்காணிக்கவும் பத்து விசாரணை அமைப்புகளுக்கு அனுமதி அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது ஆணை பிறப்பித்துள்ளது. இது குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அப்பட்டமான சர்வாதிகார நடவடிக்கை ஆகும்.
மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2009-இன் விதிகளில் நாட்டின் பாதுகாப்புக்காக முன் அனுமதி பெற்று குடிமக்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்களை ஆராய வழியுள்ளது எனினும் ’அந்தரங்கமும் அடிப்படை உரிமையே’ என கடந்த 2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பின்னர் ஆதார் தொடர்பான வழக்கில் அதை மறு உறுதி செய்ததற்குப் பிறகும் அந்த விதிகளை மத்திய அரசு தனது விருப்பம்போலப் பயன்படுத்தமுடியாது என்ற தடை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் பிறப்பித்திருக்கும் இந்த ஆணை பிரதமர் மோடி இந்த நாட்டை சர்வாதிகார முறையில் ஆள விரும்புகிறார் என்பதை உணர்த்துகிறது. பொதுத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்த ஆணை பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகப் பொய் வழக்குகளைப் புனைந்து அரசியல் ஆதாயம் தேடவே இந்த உத்தரவு வழிவகுக்கும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரான இந்த ஆணையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- மகளிர் இடஒதுக்கீடு சட்டம் இயற்றவேண்டும்
இந்தியாவின் மக்கள் தொகையில் பெண்கள் சுமார் 50 விழுக்காட்டுக்கும் மேலாக உள்ளனர் என்றாலும் இதுவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமன்றங்களிலும் அவர்களது பிரதிநிதித்துவம் 10 விழுக்காடுகூட இல்லை. அந்த அவைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 108 ஆவது அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா 2008 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசால் உருவாக்கப்பட்டது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா மக்களவையில் 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மக்களவையில் தற்போதுள்ள 543 உறுப்பினர்களில் 62 பேர்தான் பெண்கள். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 21 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அது மொத்தமுள்ள 232 இடங்களில் வெறும் 9 விழுக்காடு மட்டுமே ஆகும்.
இந்திய வாக்காளர்களில் 49 விழுக்காட்டினராகப் பெண்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் ஆறு லட்சம் பேர் கூடுதலாக உள்ளனர். அப்படியிருந்தும் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது வேதனையளிக்கிறது.
பாலின சமத்துவத்தை மறுப்பது சனாதனம், அந்த சமத்துவத்துக்காகக் குரலெழுப்புவது சனநாயகம். இனியும் காலம் தாழ்த்தாமல் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டமாக்கவேண்டும் என இம்மாநாடு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது. அதை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றவேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
- விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வரவேண்டும்
இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் ‘அதிக வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெறுகிறார்’ என்ற தேர்தல் முறையில் (FPTP) , ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் அதிக வாக்குகளை எவர் பெறுகிறாரோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். எனவே, அவரைத்தேர்ந்தெடுத்த வாக்குகள் மதிப்புள்ளவையாக ஆகின்றன. அவரைத் தவிர மற்றவர்களுக்கு கிடைக்கும் வாக்குகள் அனைத்தும் மதிப்பற்றவையாக ஆகின்றன. இதனால் எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் கூற்று பொய்யாக்கப்படுகிறது. அரசியல் சமத்துவம் எட்டப்படாமலேயே உள்ளது. எனவேதான், இந்தியாவில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையைக் கொண்டுவர வேண்டுமென்று நீண்டகாலமாக பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
1974 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களால் நியமிக்கப்பட்ட நீதிபதி வி.எம்.தார்குண்டே தலைமையிலான குழுவும் அதை பரிந்துரைசெய்துள்ளது. இந்தியாவில் தலைமை தேர்தல் ஆணையர்களாக இருந்த பலரும் அதை வலியுறுத்தியுள்ளனர். இந்திய சட்ட ஆணையமும் விகிதாச்சார பிரதிநித்துவ முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனப் பரிந்துரை செய்து 1999 ஆம் ஆண்டு விரிவான அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் அளித்துள்ளது.
எனவே, அவற்றின் அடிப்படையில் 30% பிரதிநிதிகளை நேரடித் தேர்தல் மூலமாகவும் , 70% பிரதிநிதிகளை விகிதாச்சார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும்தேர்வுச் செய்யக்கூடிய தேர்தல் முறை ஒன்றை இந்தியாவில் நடைமுறைக்குகொண்டுவர வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
-கே.பி.சுகுமார், சி.அருணகிரி.