பொன்னுசாமி மற்றும் அவரது மனைவி மல்லிகா பேரபிள்ளையோடு.(பழைய படம்)
திருச்சி மாவட்டம், திருச்சி (கிழக்கு) வட்டம், கொட்டப்பட்டு வருவாய் கிராமம், குலாப்பட்டி என்ற முகவரியில் வழுக்கையன் (லேட்) என்பரின் மகன்கள் ஆண்டி மற்றும் பொன்னுச்சாமி ஆகியோர் பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொட்டப்பட்டு வருவாய் கிராமம், சர்வே எண்: 316/1-ல் இவர்களுக்கு சொந்தமான பூர்வீகமான நிலத்தில் 42 சென்ட் இடத்தையும், சர்வே எண்: 316/7-ல் அரசுக்கு சொந்தமான 66 சென்ட் தரிசு நிலத்தையும், திருச்சி மாவட்டம், திருச்சி (கிழக்கு) வட்டம், கொட்டப்பட்டு வருவாய் கிராமம், குலாப்பட்டி என்ற முகவரியில், வசித்து வரும் சந்தானம் த/பெ. பரட்டையன் என்பவர், போலி ஆவணங்கள் மூலம் மேற்படி இடத்தை அபகரித்துள்ளார்.
இதில் சர்வே எண்: 316/7 அரசுக்கு சொந்தமான 66 சென்ட் தரிசு நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனையும் செய்துள்ளார். இதற்கு சம்மந்தப்பட்ட வருவாய்துறை மற்றும் பத்திரப்பதிவுதுறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
போலி ஆவணங்கள் மூலம் மேற்படி இடத்தை அபகரித்த சந்தானம் த/பெ.பரட்டையன் என்பவர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வழுக்கையன் (லேட்) மகன் பொன்னுச்சாமி என்பவர் பலமுறை வருவாய்துறை, காவல்துறை மற்றும் பத்திரப் பதிவுதுறை அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக புகார் மனுக் கொடுத்துள்ளார். ஆனால், மேற்படி சந்தானம் த/பெ.பரட்டையன் என்பவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கிடையில் போலி ஆவணங்கள் மூலம் இடத்தை அபகரித்த சந்தானம் குறித்து, நேற்று முன்தினம் (04.05.2019) கூட, திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் பொன்னுச்சாமி புகார் கொடுத்துள்ளார். ஆனால், அவரது புகாரை வாங்க மறுத்து அவரை கேவலமாக திட்டி அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (05.05.2019) இரவு 9.30 மணியளவில் புகார் கொடுத்த பொன்னுச்சாமி, அவரது அண்ணன் மகன்கள் அப்பாவு, அப்பாவு தம்பி ஆகியோரை, போலி ஆவணங்கள் மூலம் இடத்தை அபகரித்த சந்தானம் மற்றும் அவரது மகன் பாலமுருகன் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் அப்பாவு என்பவருக்கு தலை மற்றும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பொன்னுச்சாமி மற்றும் அப்பாவு தம்பி ஆகியோருக்கு மூக்கில் வெட்டுகாயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இது குறித்து ஏர்போர்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
மேற்படி சந்தானம் தன்னை ஒரு விவசாயி போல் வெளித்தோற்றத்திற்கு காட்டிக்கொண்டாலும், இவருக்கு முக்கிய தொழிலே ரியல் எஸ்டேட் புரோக்கர்தான். மேலும், இவருக்கு பின்னால் ஆள் பலம், அதிகார பலம், மற்றும் பண பலம் பொருந்திய ஒரு சட்ட விரோத கும்பல் பக்கப்பலமாக இருந்து இவரை இயக்கி வருகிறது. அந்த துணிச்சலில்தான் கூலிப்படை மற்றும் கட்ட பஞ்சாயத்துக்காரர்களின் உதவியுடன் சந்தானம் இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
ரியல் எஸ்டேட் புரோக்கர் சந்தானத்தின் செல்போன் அழைப்புகளையும், அவரது வீட்டையும் அதிரடி ஆய்வு செய்தால் பலத்திடுக்கிடும் ஆதாரங்கள் வெட்டவெளிச்சமாகும்.
-கே.பி.சுகுமார்.