திருச்சி, தேசியக் கல்லூரிக் கலையரங்கில் பேராசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி 26-06-2019 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.சுந்தரராமன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மதுரை காவல் துணை ஆணையர் முனைவர் த.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேராசிரியர்களிடையே பணித்திறன் மேம்பாடு குறித்துச் சொற்பொழிவு ஆற்றினார்.
அவர் தம் உரையில், இந்திய உயர் கல்வி வரலாற்றில் திருச்சி தேசியக் கல்லூரிக்கான சிறப்பியல்புகளைப் பட்டியலிட்டார்.
இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் தமிழகத்தின் கேந்திரமாகத் தேசியக் கல்லூரி விளங்கியதற்கான ஆதாரங்களை எடுத்துதுரைத்தார். இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தை நினைத்து இங்குப் பணியாற்றும் பேராசிரியர்கள் பெருமிதம் கொள்வதுடன், இன்றைய மாணவர்களையும் நாட்டுப்பற்று மிக்கவர்களாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பேராசிரியர்களிடம் இருக்க வேண்டிய பரந்துபட்ட வாசிப்புப் பண்பாடு குறித்து விளக்கினார். மாணவர்களுக்கு எந்தெந்த வழிகளில் ஆசிரியர்கள் உந்து சக்தியாகத் திகழவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கருத்துரை வழங்கிய கல்லூரிச் செயலர் கா.ரகுநாதன், நூற்றாண்டு விழா காணும் தேசியக் கல்லூரியின் வரலாற்று நூலாக்கத்திற்குக் கருத்துதவி செய்திடுமாறு சிறப்பு விருந்தினரிடம் வேண்டுகோள் வைத்தார்.
முன்னதாகக் கல்லூரியின் அகநிலைத் தரமேம்பாட்டுப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.எஸ்.முகம்மது ஜாபிர் வரவேற்புரை ஆற்ற, உடற்கல்வித்துறை இயக்குநர் முனைவர் டி. பிரசன்னபாலாஜி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரித் துணை முதல்வர்கள் முனைவர் டி.இ. பெனட், முனைவர் பி.எஸ்.எ.ஸ். ஆகிலாஸ்ரீ, தேர்வு நெறியாளர் முனைவர் ஏ.டி.இரவிச்சந்திரன், கலைப்புல முதன்மையர் முனைவர் து.ஸ்ரீதர் மற்றும் பல்துறை பேராசிரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியைத் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சா. நீலகண்டன் தொகுத்து வழங்கினார்.
–எஸ்.திவ்யா.