பூண்டி மாதா பேராலயம் (Poondi Madha Basilica), தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு வடமேற்கில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் கொள்ளிடம் ஆற்றிற்கும், காவிரி ஆற்றிற்கும் நடுவில் “பூண்டி” என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.
18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகரான அருட்தந்தை வீரமாமுனிவரின் முயற்சியால் இக்கோவில் கட்டப்பட்டது.
இக்கோவில் கட்டப்பட்ட தொடக்க காலத்தில் ராணி இம்மாகுலேட் மேரி தேவாலயம் (Church of Mary Queen of Immaculate Conception) என்று அழைக்கப்பட்டு வந்தது. 1955-ல் இக்கோவிலின் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய லூர்து சேவியர் கோவிலை புதுப்பிக்க எண்ணி ஒரு பொறியாளரிடம் ஆலோசனை கேட்டார்.
ஆலயத்தின் உள்கட்டமைப்புகளை பாதிக்காமல் கூரையை மட்டும் சீரமைக்க எண்ணினார். அதற்காக ஆகும் செலவிற்கான பணத்தைத் தன்னால் ஏற்பாடு செய்ய முடியாதென எண்ணியவர், பூண்டி மாதாவிடம் தன் வேண்டுதலை முன்வைத்து பிராத்தனை செய்தார். அன்று இரவு பெய்த மழையில் கோவிலின் கூரை மட்டும் இடிந்து விழுந்தது. ஆலயத்தினுள் எந்தப் பொருளும் சேதம் அடையவில்லை. பொருட்செலவும் மிச்சமானது. அன்று முதல் “பூண்டி மாதா கோவில்” என்றே அழைக்கப்படுகிறது.
பேராலய அந்தஸ்து வழக்கப்பட்ட பிறகு, இந்த பேராலயம் வேளாங்கன்னி மாதா கோவிலை போலவே விரிவு படுத்தப்பட்டது. இங்கு தினந்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இப்படி வராலாற்று சிறப்பும், ஆன்மீகத்தின் அடையாளமாகவும் இருக்கும் பூண்டி மாதா கோவிலில், நேற்று இரவு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்த பலி பீடத்தின் கண்ணாடி கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, மாதா சொரூபத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க கிரீடம், தங்க முலாம் பூசப்பட்ட ஜெபமாலை, மாதாவின் கையில் இருந்த நெக்லெஸ் உள்ளிட்ட சுமார் 18 பவுன் நகைகள் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பூண்டி மாதா பேராலய அதிபரும், பங்குத் தந்தையுமான பாக்கியசாமி அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்தை பார்வையிட்ட திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய போலீசார், இதுக்குறித்து வழக்கு பதிவு (Crime No: 137/2019) செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா Closed-circuit television (CCTV), பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி Closed-circuit television (CCTV) பதிவை பார்த்தபோது முகத்தை மூடியபடி மர்மநபர் கேமராவை துணியால் மூடுவதும், மற்ற கேமராக்களை வேறு திசையில் திருப்பி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு சர்ச் பூட்டப்படும் போதே அந்த நபர் உள்ளேயே பதுங்கி இருந்திருக்க வேண்டும். அப்படியானால், அவ்வளவு கவனக்குறைவாக அன்றிரவு ஆலயத்தின் கதவுகளை பூட்டியது யார்? நேற்று அதிகாலை வழக்கம்போல் ஆலயத்தின் கதவுகளை திறந்தது யார்? கதவு திறந்தவுடன் திருடன் நைசாக தப்பி செல்வது கதவுகளை திறந்த நபருக்கு தெரியாமல் போனது எப்படி?
இரவு நேரத்தில் பணியாற்றும் 10-க்கும் மேற்பட்ட காவலாளிகள் அன்று எங்கே போனார்கள்? என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? விழித்து இருந்து பணியாற்றுவதுதானே காவலாளிகளின் வேலை? அப்படி விழித்து இருந்தார்கள் என்றால், இரவு நேரத்தில் ஆலயத்தின் உள்ளே திருடன் மாதாவின் பலிபீடத்தின் கதவின் பூட்டை உடைக்கும் சப்தம் கேட்டுருக்குமே? மாதாவின் தலையில் கை வைத்த அந்த மர்ம நபர் யார்? நடந்தது எல்லாமே மர்மாகவே உள்ளது.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் விசாரித்தோம். சிசிடிவி பதிவு தெளிவாக இல்லாததால் குற்றாவாளியை அடையாளம் காண்பதில் சிரமமாக உள்ளது என்றார்.
எது எப்படியோ அங்கு உள்ளவர்கள் உடந்தையாக இல்லாமல் இந்த களவு நிச்சயம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, கை புண்ணுக்கு கண்ணாடி தேட வேண்டிய அவசியமில்லை.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Police sar kuttravalligalai kandupidithu, kadumayana thandanai vazhanga vendum.