சேலம் மாவட்டம், ஏற்காடு, மலைப்பாதையில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். ஏற்காடு கூத்துமுத்தல் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் ஆண்டி வயது 60, வெங்கடாசலம் மகன் ரத்தினம் வயது 37, குப்புசாமி மகன் மணி வயது 29, குப்புசாமி மனைவி லட்சுமி வயது 45, குப்புசாமி மகன் அண்ணாமலை வயது 40, அன்னக்கொடி மகள் சுகந்திகா வயது 7 ஆகியோர், நேற்று மாலை ஆயுத பூஜைக்காக பொறி, கடலை உள்ளிட்ட பொருட்களை ஏற்காட்டில் வாங்கிக்கொண்டு ஜீப்பில் கூத்துமுத்தல் நோக்கி வந்துள்ளனர்.
ஜீப்பை கீரைக்காடு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் பழனி வயது 40 என்பவர் ஓட்டியுள்ளார். ஆத்துப்பாலத்தை கடந்து 5 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஜீப் ஸ்டியரிங்க லாக் ஆகியுள்ளது. ஓட்டுனரால் ஜீப்பை வளைக்க முடியாமல், 15 அடி பள்ளத்தில் ஜீப் விழுந்துள்ளது.
இவ்விபத்தில் ஆண்டி மற்றும் ரத்தினம் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ள ஐந்து பேரும் வாழவந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஏற்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
–நே.நவீன் குமார்.