திருச்சி திருவெறும்பூர் பகுதியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாய்லர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் மிகுந்த உச்சகட்ட பாதுகாப்பில் உள்ள இந்த நிறுவனத்தில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலை வளாகத்தில் பணியாளர்களுக்கான நிர்வாக அலுவலக கட்டிடம் எண் : 24ல் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது.
இங்கு பாய்லர் தொழிற்சாலை நிர்வாகத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் வங்கி இருப்பு தொகை போன்றவை உள்ளது. அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை நேற்று சூட்கேசில் வைத்து காசாளர் தனது அறையில் வைத்து உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் வங்கியை திறந்து பார்த்த போது காசாளர் அறையில் வைக்கப்பட்டிருந்த பணம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து பெல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வங்கிக்கு வந்த பெல் மற்றும் திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் இரவு வங்கி ஜன்னல் வழியாக முகமூடி அணிந்து கையில் பையுடன் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் சூட்கேசில் வைக்கப்பட்டிருந்த பணத்தை வேறு ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டு அதே வழியாக தப்பிச் சென்றது தெரியவந்தது.
பின்னர் பணம் கொள்ளை போன வங்கிக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். மேலும், அர்ஜூன் என்ற மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும், கடந்த மாதம் லலிதா ஜூவல்லரி கடையிலும் கொள்ளை சம்பவம் நடந்துள்ள நிலையில் தற்பொழுது பலத்த பாதுகாப்பு உள்ள பெல் நிறுவனத்தில் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.சிராசுதீன்
Very bad