சேலம் மாவட்டம், ஏ.என் மங்களம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சிலம்பரசன், வயது 28, எலக்ட்ரிசீயன். இவரும் இவரது நண்பர்களான கூட்டாத்துப்பட்டியை சேர்ந்த சிவப்பிரகாசம் மகன் பிரபாகரன், வயது 29 மற்றும் முனுசாமி மகன் துரைசாமி, வயது 28. மூவரும் நேற்று முன்தினம் ஏற்காட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் ஏற்காட்டில் பகோடா பாயின்ட், வியூ பாயின்ட் அருகில் மது அருந்தியுள்ளனர்.
பின்னர் வாழவந்தி கிராமம் வழியாக சேலம் புறப்பட்டுள்ளனர். வழியில் வாணியாறு ஆத்துப்பாலம் பகுதியில் சாலையோரம் தங்கள் இரண்டு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் தேக்கு மர தோப்பிற்குள் சென்று, அங்கும் மது அருந்தியுள்ளனர்.
அங்கு, சிலம்பரசனுக்கு மது போதை அதிகரித்துள்ளது. அதனால், சிலம்பரசனை அங்கேயே விட்டு விட்டு பிரபாகரன் மற்றும் துரைசாமி இருவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். நேற்று காலையும் சிலம்பரசன் வீட்டிற்கு வராததாலும், அவரின் செல்போனுக்கு சிக்கனல் கிடைக்காததாலும் நண்பர்கள் பிரபாகரன் மற்றும் துரைசாமி இருவரும் நேற்று மீண்டும் ஏற்காடு வந்தனர்.
அங்கு சாலையோரம் சிலம்பரசனின் பைக் கேட்பாரற்று நின்றிருந்தது. மேலும், வனப்பகுதிக்குள் சென்று பார்த்த போது, அங்கு சிலம்பரசனின் ஒரு கால் செருப்பும், செல்போனும் கிடந்துள்ளது. அருகில் தேடியபோது, அங்குள்ள குட்டை ஒன்றில் சிலம்பரசனின் பிரேதம் மிதந்துள்ளது.
பின்னர் ஏற்காடு காவல் துறைக்கும், சிலம்பரசனின் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான காவல் துறையினர், சிலம்பரசனின் பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன சிலம்பரசனுக்கு மனைவி மற்றும் 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
கண்காணிப்பு குடில்கள் உள்ள வனப்பகுதிக்குள் மது அருந்தும் நபர்களை ஏற்காடு வனத்துறையினர் கண்காணிக்க தவறியதால், இது போன்ற உயிரழப்புகள் ஏற்படுகின்றனர். எனவே, மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.