பொங்கல் பரிசு மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான வேட்டி,சேலைகள்: முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

pr040114lpr040114c.jpg

சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி–சேலை வழங்கும் திட்டங்களின் தொடக்க விழா, புதிய திட்டப்பணிகளின் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் தொடக்க விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தூய வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதற்காக அமைக்கப்பட்டு இருந்த மேடைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா 04.01.2014 பகல் 3 மணிக்கு வருகை தந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவில் புதிய திட்டங்களையும், ஏற்கனவே நடைபெற்று முடிந்த திட்டப்பணிகளையும் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ரூ.100 ரொக்கபணத்துடன் கூடிய ரூ.281 கோடி ரூபாய் மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

அதன் பின்னர் 3 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரம் பேர் பயன் பெறும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் ரூ.486 கோடியே 36 லட்சம் மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்ட பகுதிகளுக்கு ரூ.74 கோடியே 85 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று முடிவடைந்த பணிகளையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசும்போது கூறியதாவது:–

1982–ம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் விளைவாக ஏற்பட்ட வறட்சியினைத் தொடர்ந்து, நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் 1983–ம் ஆண்டு இந்த வேட்டி–சேலை வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேட்டிகள் மற்றும் சேலைகளின் தரத்தினை உயர்த்தும் வகையில், 40–ம் எண் பருத்தி நூலுடன் பாலியஸ்டர் நூல் கலந்த வேட்டிகள் மற்றும் சேலைகளை தயாரித்து வழங்குமாறு 2003–ம் ஆண்டு நான் ஆணையிட்டேன். இதன்படி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று ஏழை, எளிய மக்களுக்கு தரமான வேட்டி–சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டிற்கான சேலைகளில் பெண்களின் விருப்பத்திற்கேற்ப சேலைகளின் வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் மாற்றம் செய்யவும், தரத்தினை மேம்படுத்தும் வகையில் 60–ம் எண் பருத்தி சாயமிட்ட நூலினை பாவாகவும், 80/34 பருமன் சாயமிட்ட பாலியஸ்டர் நூலினை ஊடையாகவும், 150 பருமன் காட்லுக் சாயமிட்ட பாலியஸ்டர் நூலினை கரையாகவும் கொண்ட பாலிகாட் சேலைகளை வழங்கவும் நான் உத்தரவிட்டு இருந்தேன். இதன்படி, இந்த ஆண்டிற்கான சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட சேலைகளை வழங்குவதன் மூலம் அரசுக்கு 73 கோடியே 44 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் விலையில்லா வேட்டி–சேலை வழங்கும் திட்டம் 486 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் இந்த ஆண்டு செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம், 15 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் 50 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

1 கோடியே 73 லட்சத்து 24 ஆயிரம் பெண்களும், 1 கோடியே 72 லட்சத்து 5 ஆயிரம் ஆண்களும் என மொத்தம் 3 கோடியே 45 லட்சத்து 29 ஆயிரம் பேர் பயனடையக் கூடிய வேட்டி–சேலை திட்டத்தினை இன்று நான் தொடங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பருவமழை பொய்த்து விட்டதன் காரணமாகவும், தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடகா தர மறுத்ததன் காரணமாகவும் ஏற்பட்ட வறட்சி நிலைமை மற்றும் பயிர்கள் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், ஒரு கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு ஒன்றை நான் வழங்கினேன்.

வரும் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் என்ற சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை இன்று நான் தொடங்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த சீர்மிகு விழாவில், 74 கோடியே 85 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதிலும், 21 கோடியே 35 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்ததிலும், 18 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,17,509 பயனாளிகளுக்கு வழங்குவதிலும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இது தவிர 3 கோடியே 54 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொங்கல் பரிசினை நீலகிரி மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 21 ஆயிரத்து 290 குடும்பங்களுக்கு வழங்குவதிலும் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மொத்தத்தில் 117 கோடியே 98 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் நீலகிரி மாவட்டத்திற்காக நான் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அரசு தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். வருவாய்த்துறை அமைச்சர் பி.வி.ரமணா, தமிழக கைத்தறி துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜ், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு ஆகியோர் விழாவுக்கு முன்னிலை வகித்து பேசினார்கள்.

சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு 06.01.2014 முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.