தமிழகத்தில் போதிய மழை பெய்யாததாலும், கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததாலும், 1876 ஆம் ஆண்டிற்கு பிறகு, கடந்த 140 ஆண்டுகளில் இதுவரை எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கடுமையான வறட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்டது.
விவசாய கூலி வேலை இல்லாததாலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக (100 நாள்) வேலை தொடர்ந்து முறையாக வழங்காததாலும், அதற்கு முழுமையான சம்பளம் கிடைக்காததாலும், கிராமங்களில் வசிக்கும் விவசாய கூலி தொழிலாளர்கள் வயிற்று பிழைப்பிற்காக கடைகள் மற்றும் கட்டிட வேலைகளுக்காக வெகுதூரங்களுக்கு நகரங்களை நோக்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள கிராமப்புற விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அத்யாவசிய பொருட்களை கொண்டுதான் அவர்கள் உண்மையிலுமே உயிர் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக ஆற்றாங்கரையோர கிராமங்களில் வசிக்கும் வேலையில்லா இளைஞர்கள் மற்றும் 40 வயதிற்குட்பட்ட விவசாய கூலித்தொழிலாளர்கள் உடல் உழைப்பின் மூலம் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கும் வேலைகளில் ஈடுப்பட்டு வந்தனர். ஒரு நாளைக்கு ஒரு மாட்டு வண்டியில் இரண்டு அல்லது மூன்று நடை மட்டும்தான் மணல் அள்ள முடியும். அதற்கு மேல் அவர்கள் கடுமையாக முயற்சித்தால் கூட மாடு ஒத்துழைக்காது. இவர்கள் மாட்டு வண்டிகளில் ஏற்றிச் செல்லும் மணல் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் மக்களின் தேவைக்காக மட்டும்தான் விற்பனை செய்து வந்தனர்.
ஒரு மாட்டு வண்டி மணல் சாதாரணத் தருணங்களில் ரூ.1000 முதல் ரூ.1500 வரையும், லாரிகள் வேலை நிறுத்தம் மற்றும் மணல் தட்டுப்பாடு உள்ள தருணங்களில் ரூ.2000 முதல் ரூ.3000 வரையும் விற்பனையானது.
பல கிராமங்களில் ஆற்றுக்குள் மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வதற்கு போதிய பாதை வசதி இல்லாததால் பெரும்பாலும் கூலி ஆட்களைக் கொண்டுதான் மணலை தலையில் தூக்கி வந்து மாட்டு வண்டியில் கொட்டி வந்தனர். இதனால் கிடைக்கும் வருமானத்தில் பாதியளவு கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டியுள்ளது.
மேலும், ஒரு ஜோடி காளை மாட்டுக்கு வைக்கோல், புண்ணாக்கு, தீவனம், அதற்கான வைத்தியச் செலவு, மணல் அள்ளினாலும், அள்ளாவிட்டாலும், வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு நாளைக்கு சுமார் ரூ.1500 செலவாகிறது. மேலும், வண்டி மாடுகள் வாங்கியதற்கான கடன் மற்றும் அதற்கான வட்டி தொகைகள், இதுத்தவிர மாட்டு வண்டி ஓட்டும் நபர்கள் பெரும்பாலும் டீ, காபி, வெற்றிலை, பாக்கு மற்றும் மாலை நேரங்களில் மதுப்பழக்கம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த செலவினங்கள் எல்லாம் போக மீதமுள்ள தொகைதான் அவர்களின் குடும்பத்திற்கு போய் சேர்ந்தது. இதில் ஒரு நாள் வண்டி ஓடவில்லை என்றாலும், அவர்கள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது.
இப்படி தினந்தோறும் செத்துப் பிழைக்கும் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கும் அப்பாவி கிராமப்புற இளைஞர்களையும், விவசாய கூலித்தொழிலாளர்களையும், சட்ட விரோதமாக மிரட்டி அச்சுறுத்தி தனிப்பட்ட ஆதாயத்திற்காக பணம் பறிக்கும் வேலைகளில் காவல்துறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உள்ளூர் கட்டப்பஞ்சாயத்துகாரர்கள் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்தனர்.
மாமுல் கொடுக்கவில்லை என்றால், மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவதாக கடுமையாக மிரட்டி, ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.5,000 முதல் 15,000 வரை கட்டாய வசூல் செய்தனர். வசூல் செய்யப்படும் தொகைக்கு எந்த ரசீதும் வழங்குவதில்லை. எந்தெந்த கிராமங்களில் யார், யார் மணல் வண்டி ஓட்டுகிறார்கள் என்பதை கண்காணிப்பதற்கும், அவர்களிடமிருந்து மாமுல் வசூலித்து கொடுப்பதற்கும், அதற்கான ஏஜென்டுகளையும், கட்டப்பஞ்சாயத்துகாரர்களையும் அதிகாரிகளே நியமித்தனர்.
இதனால் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் கிராமப்புற விவசாய தொழிலாளர்கள் மணல் அள்ளுவதை முற்றிலும் நிறுத்திவிட்டு, கடந்த 6 மாத காலமாக மாடுகளுக்கு கூட வைக்கோல், புண்ணாக்கு மற்றும் தீவனம் வாங்க வழியில்லாமல் வண்டி மாடுகளை வைத்துகொண்டு வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். டயர் வண்டிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படாததால் அவை துருப்பிடித்தும், டயர்கள் சேதமடைந்தும் வருகின்றன. பல பேர் தீவனம் வாங்க வழியில்லாமல் வேறு வழியின்றி காளை மாடுகளை கறிக்காக அடிமாட்டு விலைக்கு அநியாயமாக விற்று வருகின்றனர்.
எனவே, கிராமப்புற இளைஞர்களையும், மாட்டு வண்டி விவசாய கூலித்தொழிலாளர்களையும், வண்டி மாடுகளையும் காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.
உடல் உழைப்பின் மூலம் மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதால் சுற்றுச் சூழலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
நவீன யுக்திகளை கையாண்டு மணல் விற்பனையில் சீர்திருத்தங்ளை செய்து “ஆன்லைன்” மூலம் மணல் விற்பனை செய்து முறைக்கேடுகளை தடுத்து வருவதாக சொல்லும் தமிழக அரசு, தமிழக ஆற்றாங்கரையோர கிராமங்களில் ஒரு தாலுக்காவிற்கு குறைந்த பட்சம் 6 இடங்களில் மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதற்கு எழுத்துப்பூர்வமான அனுமதி வழங்கி, அதற்கான உரிய கட்டணத்தையும் நிர்ணயம் செய்து, அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ, வங்கி அல்லது கருவூலத்தின் மூலமாகவோ செலுத்துவதற்கு வழிவகை செய்தால், அதை மனமகிழ்ச்சியோடு செலுத்துவதற்கு மாட்டு வண்டிக்காரர்கள் அனைவரும் தயாராகவே உள்ளனர். இதனால் தமிழக அரசுக்கும் வருவாய் கிடைக்கும். மாட்டு வண்டி தொழிலாளர்களும் நிம்மதியடைவார்கள். இதனால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான வண்டி மாடுகளும் நிம்மதியாக உயிர் வாழும், கிராமப்புற மக்களின் பொருளாதாரமும் மேம்படும்.
மேலும், மணல் தட்டுபாடும், மணல் விலையும் குறையும். உள்ளூர் கட்டுமானப் பணிகளும் தொய்வில்லாமல் நடக்கும். தினக்கூலியாக வேலைப்பார்க்கும் லட்சக்கணக்கான கட்டிடத் தொழிலாளர்களுக்கு தடையில்லாமல் தொடர்ந்து வேலையும் கிடைக்கும்.
சாதாரண விவாசாய குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்து, இன்று தமிழக முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கிராமப்புற ஏழை விவசாய கூலி தொழிலாளர்களின் இன்றைய நிலையை இதற்குமேல் நாம் விவரிக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, அவர் மனது வைத்தால் ஒரே நாளில் இப்பிரச்னைக்கு தீர்வு காணமுடியும்.
செய்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
–டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Udanadi nadavedikkai eduththu, mattu vandi thozhilalargalin, nalan kakka vendum