சாலை விபத்தில் பலியான தனது உதவியாளருக்கு, அமைச்சர் Dr.C.விஜய பாஸ்கர் வெளியிட்டுள்ள இரங்கல் கவிதை!

விபத்தில் பலியான வெங்கடேசன்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகில் உள்ள பரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (31), இவர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராகவும், அவருக்கு வலது கரமாகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சென்னைக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரை, திருச்சி விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு சென்று கொண்டிருந்த வெங்கடேஷசன், கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது கார் எதிர்பாராத விதமாக புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வெங்கடேசன் மற்றும்  காரை ஓட்டிச்சென்ற இடையபட்டியைச் சேர்ந்த செல்வம்(38) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வெங்கடேசா
என்னுயிர் தம்பி
என் துணைக்கரமே..
ஏனப்பா உனக்கிந்த அவசரம் ?
என்னிடம் சொல்லாமல் எங்கும் செல்லமாட்டாயே
சொல்லாமல் கொள்ளாமல்
விண்ணகம் சென்றுவிட்டாயே
எப்படி தாங்குவேனப்பா?

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக
என்னில் பாதியாகி என்னோடு பயணித்தாயே
பாதியில் இறங்கிப் போய்விட்டாயே
என் நம்பிக்கையே
புதுகையில் கிடைத்த
வெற்றியின் ஆதாரமே நீதானப்பா
வெற்றி மாலையைஎங்களுக்குத் தந்துவிட்டு
மரணமாலையை நீ சூடிக்கொண்டாயே?

என் அன்புத்தம்பியே!
ஆயிரம் கரங்கள் உறுதுணையாக இருந்தபோதும்
உன் கரங்கள்தானே தும்பிக்கை எனக்கு ?
போய்விட்டாயே
என் பாச மகனே
என் பார்வையின் பொருளறிந்து
பம்பரமாய் சுழலும் நீ
என்னை பரிதவிக்கவிட்டு
போனதென்ன என் சுறுசுறுப்பே….
விழியிழந்ததுபோல்
துடித்துக் கிடக்கிறேனடா….

எதிலும் நிதானம் காட்டி சிந்தித்து செயலாற்றும் நீ
மரணத்தில் மட்டும் அவசரம் காட்டி
என்னை கதறச் செய்துவிட்டாயே
கண்ணே

ஓய்வின்றி உழைத்த நீ
இளைப்பாறச் சென்றுவிட்டாயே என் ஆற்றலே….
சாலை விபத்தில் சிக்கி சாகக்கிடந்த பலரைக்
காப்பாற்றி மகிழ்ச்சி கொண்ட என்னால்,
உன்னைக் காப்பாற்ற வாய்ப்பில்லாமல் போயிற்றே
என் நேசத்திற்குரியவனே
விபத்து நிகழ்ந்த இடங்களில்
ஓடோடிச் சென்று உதவிய உன்னை
விபத்தில் பறி கொடுப்பேனென்று
எண்ணவில்லையே

என் இனிய இளைஞனே
அப்பா என அழைக்கும்
உன் பாசப் பிள்ளைக்கு
என்ன மறுமொழி
சொல்வதடா தம்பி!

கண்ணீர் வழிய உனக்கு
ஒரு இரங்கல் செய்தி
எழுதவைப்பாய் என்று
எண்ணவில்லையே
என் சொந்தமேநீயின்றி
எப்படி இயங்குவேனப்பா?

இரங்காமல் கொண்டு போய்விட்டானே காலன்
இரக்கமற்ற இறைவன் உன்னை தன்னருகே
இருத்திக் கொண்டு என்னை துடிதுடிக்க வைத்துவிட்டானே!

நெஞ்சார்ந்த கண்ணீர் அஞ்சலி
என் அன்பு தம்பி!!

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் Dr.C.விஜய பாஸ்கர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

–டாக்டர் துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

 

 

One Response

  1. MANIMARAN January 13, 2020 12:26 pm

Leave a Reply