தை அமாவசையை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் இன்று காலை முதல் கூட்டம் அலைமோதி வருகிறது. பித்ருக்கள் வழிபாட்டிற்காக ஆயிரக்கணக்கானோர் அம்மா மண்டபம் காவிரி படித்துறை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி, திருச்சி மாநகர காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தை மாதத்தில் வரும் பொங்கல் பண்டிகையை அடுத்து வரக்கூடிய மிகப் பெரிய சிறப்பு வாய்ந்த நாள் தை அமாவாசை.
வருடத்தில் மூன்று முக்கிய அமாவாசைகள் வருகின்றன.
1.தை அமாவாசை
2.ஆடி அமாவாசை
3.மகாளய அமாவாசை
இந்த மூன்று அமாவாசை தினங்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் படையல் கொடுக்க வேண்டிய முக்கியமான நாள்.
தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். சூரியன் தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். இதனை புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது.
1. மகரத்தில் சூரியன் இருக்கக் கூடிய தை அமாவாசை.
2.மேஷத்தில் சூரியன் இருக்கக் கூடிய சித்திரை அமாவாசை.
3. கடகத்தில் சூரியன் இருக்கக் கூடிய ஆடி அமாவாசை.
4. துலாம் ராசியில் சூரியன் இருக்கக் கூடிய மகாளய அமாவாசை.
இந்த நான்கு அமாவாசைகளும் புண்ணிய காலமாக பார்க்கப்படுகிறது. பலரும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையை பெரியளவில் கடைப்பிடிப்பதில்லை.
தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கின்றார். அதாவது சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார். இதனால் சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.
சூரியனும், சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் தை அமாவாசை கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகின்றது.
தெய்வத்தை தொழுது பெறக்கூடிய ஆசிர்வாதத்தை விட, நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசி வாங்குவது தான் நம் குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைக்கும் என்பது ஐதீகம்.
கடவுள் வழிபாட்டை விட, பித்ருக்களின் வழிபாடுதான் பிரதானமாக கருதப்படுகிறது. நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி, கோடியாக புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தனது தாய், தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை அவர்கள் வாழும்போதும், அவர்கள் மறைந்த பிறகும் முறையாக செய்தால், அது இறைவனுக்கு செய்ததாகவே கருதப்படுகிறது.
-டாக்டர் துரை பெஞ்சமின்,
ullatchithagaval@gmail.com
.
Yes