சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக “திருமதி கார்ட்” எனும் கைப்பேசி செயலியை திருச்சி தேசிய தொழிற்நுட்பக் கழகம் அறிமுகபடுத்தியுள்ளது.

திருச்சிராப்பள்ளி தேசிய தொழிற்நுட்பக் கழகமானது, சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக “திருமதி கார்ட்” எனும் இணைய வழி வணிகத்திற்காக கைப்பேசி செயலியை  அறிமுகபடுத்தியுள்ளது.

திருமதி கார்ட் செயலியானது அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப துறையின்(DST) கீழ் – “ஐ.சி.டி- இன் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு மேககணினி அடிப்படையிலான செயலி மூலம் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கிய தயாரிப்புகளின் சுய ஊக்குவிப்பு ” என்ற திட்டத்தின்படி உருவாக்கப்பட்டது.

சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கிய தயாரிப்புகளை சரியான வாடிக்கையாளர்களுடன் இணைப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதனை கருத்தில் கொண்டு பேராசிரியர் Dr. M.பிருந்தா மற்றும் அவரது குழுவினர் இணைந்து

1.(திருமதிகார்ட் (வாடிக்கையாளர்),

2.திருமதிகார்ட் (விற்பனையாளர்)

3. திருமதிகார்ட் (அஞ்சல் மற்றும் கையாளுதல்)

என்ற மூன்று கைப்பேசி செயலிகளை உருவாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக, திருச்சிராப்பள்ளி மகளிர் திட்டம் அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுயஉதவிக்குழுக்களுக்காக “டிஜிட்டல் சகாப்தத்தில் சந்தைப்படுத்தல் உத்திகள்: திருமதி கார்ட் மூலம் சுயஉதவிக்குழு தயாரிப்புகளின் சுய ஊக்குவிப்பு” என்ற ஐந்து நாள் நிர்வாக மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை திருச்சிராப்பள்ளி தேசியதொழிற்நுட்பக் கழகமானது நடத்த உள்ளது.

இந்த நிர்வாக மேம்பாட்டு பயிற்சி திட்டதின் ஒரு பகுதியாக “திருமதி கார்ட்” செயலி அறிமுக விழா மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறை பேராசிரியர் Dr.N.சிவக்குமரன் வரவேற்புரை ஆற்றினார்.

திருமதி கார்ட் செயலி அறிமுக விழாவை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சிவராசு துவக்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி தேசிய தொழிற்நுட்பக்கழக இயக்குனர் பேராசிரியர் Dr.மினி ஷாஜி தாமஸ் மற்றும் திருச்சிராப்பள்ளி மகளிர் திட்டம் இயக்குனர் N.சரவணன் முன்னிலை வகித்தனர்.

இதனை தொடர்ந்து கணினி அறிவியல் துறை பேராசிரியர் Dr.M.பிருந்தா “திருமதி கார்ட்” செயலியின் பயன்பாடுகளை சுயஉதவிக் குழுக்களுக்கு விளக்கி கூறினார்.

நிறைவாக கணினி அறிவியல் மற்றும் பொறியியல்துறை பேராசிரியர் Dr.ஸ்ரீதேவி நன்றியுரை வழங்கினார்.

-ஆர்.சிராசுதீன்.

 

 

2 Comments

  1. AffiliateLabz February 18, 2020 4:28 am
  2. MANIMARAN March 1, 2020 3:25 pm

Leave a Reply