திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு மதுபானக்கிடங்கில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கும் இரண்டுபேர் மீது வழக்கு பதிவு செய்ததால் டாஸ்மாக் நிர்வாகம் பணி நீக்கம் செய்ததை கண்டித்து, சிஐடியு மாநகர மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் பணி நீக்கம் செய்யப்பட்ட குடும்பத்துடன் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் அரசு மதுபான கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் இருந்துதான் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு மதுபானங்கள் ஏற்றி செல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி துவாக்குடி மதுபான கிடங்கிலிருந்து மது ஏற்றிகொண்டு பெல் நகர் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி லாரியில் இருந்து மதுபானங்களை காரில் இறங்கியபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த துவாகுடி சப் இன்ஸ்பெக்டர் ராமதுரை, 6 பேர் மீது துவாக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அதில் துவாக்குடி அரசு மதுபானக் கிடங்கில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கும் ராமச்சந்திரன், ரமேஷ்கண்ணா ஆகிய 2 பேரும் அடக்கம். இந்நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவர்களுக்கு அரசு மதுபான கிடங்கு நிர்வாகம் வேலை வழங்கவில்லை.
ராமசந்திரன், ரமேஷ் கண்ணா மீது துவாக்குடி போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி, அவர்களை உடனடியாக பணிக்கு எடுக்காத டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்தும், தொழிலாளர்கள் குடும்பத்துடன் டாஸ்மாக் கிடங்கு முன்பு சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-ஆர்.சிராசுதீன்.