கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஏற்காடு ஒன்றியத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. ஜூன் 30 தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் தடை அறிவிப்பை மீறி ஏற்காட்டிற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவர்கள் ஏற்காட்டில் நகரப் பகுதியை தவிர்த்து கிராம பகுதிகளில் உள்ள வாடகை பங்களாக்களில் தங்கியுள்ளனர். மேலும் அண்ணா பூங்கா சாலையில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் குவிகின்றனர்,மாலை நேரங்களில் ஏரிக்கரையை ஒட்டியுள்ள திட்டுகளில் காற்று வாங்குவதற்காக அமர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை உயரதிகாரிகளுக்கு ஏற்காட்டை சேர்ந்தவர்கள் புகார் அனுப்பியதையடுத்து ஏற்காடு அடிவார சோதனை சாவடியில் வாகன சோதனை பலப்படுத்தி, ஏற்காட்டை தங்கும் முகவரியாக கொண்டிருப்பவர்ளுக்கு மட்டும் ஏற்காடு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனை சேலம் ரூரல் டி.எஸ்.பி. உமாசங்கர் நேற்று காலை பார்வையிட்டார். நேற்று காலை முதல் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏற்காடு செல்ல முற்பட்டதாகவும் அவர்கள் திருப்பி அனுப்பட்டதாக ஏற்காடு காவல் உதவி ஆய்வாளர் ரகு கூறினார்.
விடுதியில் தங்கியிருந்தவர்கள், அருகில் வசிப்பவர்களுடன் தகராறு. போலீசார் சமாதானம் செய்தனர்.
ஏற்காடு ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சிலர், மக்களுக்கு நிவாரணம் மற்றும் மருந்து பொருட்கள் வழங்க வந்திருப்பதாக கூறி தங்கியிருந்தனர். நேற்று மாலை விடுதிக்கு அருகில் வசிக்கும் வெங்கடேஷ் மகன் பிரபாகரன் அவர்களிடம் ஊரடங்கின் போது எவ்வாறு தங்கும் விடுதியில் தங்கியுள்ளீர்கள்? என விசாரித்து, ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசாரும் அங்கு வந்து விடுதியில் தங்கியிருப்பவர்களை மறுநாள் காலையிலேயே விடுதியில் இருந்து கிளம்பி தங்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.
இந்நிலையில் நேற்று காலை பிரபாகரனின் தாயார் மற்றும் விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த ஏற்காடு போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, விடுதியில் தங்கியிருந்தவர்களிடம் மண்ணிப்பு கடிதம் பெற்று, அவர்களை சேலத்திற்கு அனுப்பி வைத்தனர்.
-நே.நவீன் குமார்