தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த ஏழை விவசாயி அணைக்கரை முத்து என்பவர், வனத்துறை காவலர்களால் கடந்த 22-7-2020 அன்று இரவு 11 மணிக்கு மேல் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, வனக்காவலர்கள் விசாரணையில் இருந்தபோது மரணமடைந்துள்ளார்.
அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இரவில் தனது வீட்டில் படுத்திருந்த வரை இரவு 11 மணிக்கு மேல் விசாரணைக்கு அழைத்து செல்ல வேண்டிய அவசியம் என்ன? அவர் அப்படி என்ன ஒரு குற்றம் செய்தார்? இரவில் விசாரணைக்கு அழைத்து செல்ல வேண்டிய வகையில் அப்படி என்ன குற்றம் அவர் செய்தார்? அவர் மீது அதற்கு முன்பாக ஏதேனும் குற்றம் நிலுவையில் உள்ளதா? அவர் என்ன சமூக விரோதியா? வனக்காவலர்கள் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றபோது அவருடைய வீட்டில் தகவல் சொல்லாமல் சென்றது ஏன்? தகவல் சொல்லாமல் அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் பிறகு அரை மணி நேரம் கழித்து மீண்டும் அவரது வீட்டிற்கு வந்து அவரது உறவினர்களை தட்டி எழுப்பி அவரை நாங்கள் சட்டையில்லாமல் விசாரணைக்கு அழைத்துச் சென்று இருக்கிறோம், அவர் விசாரணையில் இருக்கிறார் அவருக்கு ஒரு சட்டை கொடுங்கள் காலையில் வந்து அவரை நீங்கள் திரும்ப அழைத்து வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள் என்றால், அரை மணி நேர விசாரணையில் அணைக்கரை முத்துவிற்கு என்ன நேர்ந்தது? எதற்காக வனக்காவலர்கள் அவர் வீட்டுக்கு திரும்ப வந்து அவருக்கு சட்டை தரும்படி கேட்டார்கள்?
அணைக்கிற முத்துவை வனக்காவலர்கள் விசாரணைக்கு 11 மணிக்கு அழைத்து சென்றுள்ளார்கள் என்ற தகவல் கிடைத்த பின்பு அணைக்கரை முத்துவின் மருமகன் அவரது மகன் நடராஜனுக்கு போன் செய்து தகவல் சொல்லியிருக்கிறார் தகவல் கேட்டு அணைக்கரை முத்துவின் மகன், அவர்களது வீட்டுக்கு வந்திருக்கிறார் இந்த நிலையில் வனக்காவலர்கள் அணைக்கரை முத்துவின் மகன் நடராஜனுக்கு போன் செய்து உங்களது அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை, எனவே நீங்கள் வனக் காவல் நிலையத்திற்கு வரும்படி தகவல் சொல்லி இருக்கிறார்கள். இந்த இடத்தில்தான் ஒரு சந்தேகம் வலுக்கின்றது. காரணம், அணைக்கரை முத்துவின் வீட்டிற்கு இரண்டாம் முறை வந்த வனக்காவலர்கள் அவருக்கு சட்டை தரும்படி கேட்டு வாங்கிக் கொண்டு காலையில் வந்து காவல் நிலையத்திலிருந்து உங்கள் அப்பாவை அழைத்து செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். அப்படி சொல்லி விட்டு சென்றவர்கள், அடுத்த அரை மணி நேரத்தில் அவரது மகன் நடராஜனுக்கு போன் செய்து உங்க அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை, உடனடியாக நீங்கள் வாருங்கள் என்று அழைத்து இருக்கிறார்கள் என்றால், அணைக்கரை முத்துவிற்கு வனத்துறை விசாரணையில் என்ன நடந்தது?
வனக்காவலர்கள் சொன்ன இந்த தகவலை கேட்டு தனது சகோதரியின் கணவரை அழைத்துக்கொண்டு, மற்றொரு நண்பரை அழைத்துக்கொண்டு ஒரு காரில் அப்பாவைப் பார்க்க நடராஜன் சென்று கொண்டிருக்கும் பொழுது, எதிரிலேயே வனக்காவலர்கள் அணைக்கரை முத்துவை ஒரு காரில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களைப் பார்த்தவுடன், வனக்காவலர்கள் காரை நிறுத்திவிட்டு நடராஜனை அழைத்திருக்கிறார்கள். அவர் சென்று பார்த்தபோது வனத்துறை காரில் வனக்காவலர்கள் இரண்டு காவலர்கள் அணைக்கரை முத்துவை தாங்கி அணைத்தபடி இருக்கிறார்கள், அவர்கள் நடராஜனை அழைத்து, நீங்கள் எங்கள் வாகனத்தில் ஏறி உங்கள் அப்பாவை தாங்கிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அவருக்கு மூச்சு திணறல் இருக்கிறது, எனவே, மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
உடன் நடராஜனும், அவரது சகோதரியின் கணவரும் அந்த வாகனத்தில் ஏறியவுடன் வனக்காவலர்கள் இறங்கி பின்னால் சென்று விட்டனர். அப்போது நடராஜன் தனது தந்தைக்கு என்னாயிற்று என்று சோதித்துப் பார்த்து இருக்கிறார். அவர் மூச்சற்ற நிலையில் உயிரற்ற சடலமாக வண்டியில் இருந்துள்ளார் என்பதை நடராஜன் அறிந்து,. நகராஜன் எங்க அப்பா இறந்தது போல் இருக்கிறார், என்ன ஆச்சு என்று சொல்லி கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் இல்லை அவருக்கு சாதாரண மயக்கம் தான் என்று பதில் தந்து இருக்கிறார்கள். எனவே, நாம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
அதன்பேரில் அருகிலுள்ள கடையும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள், அங்கே மருத்துவர் வந்து வாகனத்தில் இருந்த நிலையில் அணைக்கரை முத்துவை பரிசோதித்துப் பார்த்திருக்கிறார். பார்த்துவிட்டு அவருக்கு மூச்சு இல்லை, நாடித்துடிப்பு இல்லை அவர் இறந்துவிட்டார் என்பதை தெரிவித்திருக்கிறார். மேலும், இதனை உறுதி செய்ய வேண்டும் என்றால், நீங்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.
அப்படியானால் ஏற்கனவே அணைக்கரை முத்து இறந்த நிலையில் தான் வனக்காவலர்கள் அவர்களது வாகனத்தில் அவரை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. தென்காசி அரசு மருத்துவமனைக்கு சென்ற பின்பு அவர்களும் அணைக்கரை முத்து ஏற்கனவே இறந்து விட்டார் என்பதை உறுதி செய்து விட்டனர்.
இந்நிலையில், வனக்காவலர்கள் உடனடியாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்கள். அவர்கள் ஏன் ஓடிவிட்டார்கள்? இது நமது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இது தெள்ளத் தெளிவாக நமக்கு உணர்த்துவது யாதெனில் அணைக்கரைமுத்து விசாரணையின்போது இறந்து இருக்கிறார் என்பதாகும்.
காவல்துறையினர் இதனை 176 வழக்குப்பதிவு செய்து, மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு பரிந்துரைத்து, பிரேதத்தை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அணைக்கரை முத்துவின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். அங்கே அவர்கள் அணைக்கரை முத்துவின் உடலை பரிசோதித்துப் பார்த்ததில் 18 இடங்களில் காயம் இருப்பதை மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் தெரிவிக்கிறார்கள். எனவே, பிரேத பரிசோதனை என்பது வீடியோ பதிவு மூலம் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இரவு நேரமாகிவிட்டதால் பிரேத பரிசோதனை மறுநாள் காலையில் நடைபெற வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறார்கள். ஒரு சந்தேக மரணம் என்ற அடிப்படையில் பிரேத பரிசோதனை என்பது வீடியோ பதிவு மூலம் செய்யப்பட வேண்டும் அது பகல் நேரத்தில் செய்யப்பட வேண்டும் என்பதே விதியாகும்.
இந்நிலையில், அணைக்கரை முத்துவின் உறவினரிடம் எந்தவித கையெழுத்தும் பெறாமல், அவர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் இரவு 10 மணிக்கு மேல் வீடியோ பதிவு மூலம் நாங்கள் பிரேத பரிசோதனை முடிந்து விட்டோம் என்று அதிகாலையில் காவல்துறையினர் அணைக்கரை முத்துவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது எந்த வகையில் நியாயமாகும்? இந்த செயல் ஏதோ ஒரு உண்மையை மறைக்க காவல்துறையும் முயல்கிறது என்பதையே காட்டுகிறது. அப்படித்தானே நாம் எண்ண முடியும்.
எனவே மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டி ஒரு ரிட் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சம்பவம் குறித்து அரசு தரப்பில் இதுவரை எந்தவிதமான ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இது மிகவும் வேதனை அளிக்கிறது. நாட்டில் ஒரு விவசாயிக்கு பிரச்சனை என்றால் கேட்க யாருமில்லை. அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அரசு நினைக்கிறதா? எது எதற்கோ போராடுகின்ற விவசாய சங்கங்கள், விவசாய அமைப்புகள், அணைக்கரை முத்து வனக்காவலர்கள் விசாரணையில் மரணம் எய்திய சம்பவத்தில் எதுவும் பேசாமல் இருப்பது விவசாயிகளின் நிலை இதுதான் என்பதை காட்டுகிறது. (அல்லது) அணைக்கிற முத்து என்ற விவசாயி தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால், விவசாய சங்கங்கள் அவருடைய சம்பவத்தில் துணை நின்று போராட வரவில்லையா? என்ற கேள்வியை நான் முன்வைக்கிறேன்.
எனவே, இத்தனை சந்தேகங்கள் எழுகின்ற அணைக்கரை முத்துவின் மரணம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இச்சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றது. அரசு உடனடியாக இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும், அணைக்கரை முத்துவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அணைக்கரை முத்துவின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட வன காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறறேன்.
அணைக்கரை முத்துவின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடும் அணைக்கரை முத்துவின் குடும்பத்தாருக்கும், வாகைகுளம் கிராம மக்களுக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்றென்றும் துணை நிற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
அணைக்கரை முத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன், அணைக்கரை முத்துவின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பெ. ஜான் பாண்டியன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரைமுத்து. வயது – 65. அவர் வழக்கம்போல் ஜீலை 22 ம் தேதி, தனது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் இரவு உணவு அருந்தி விட்டு உறங்கி கொண்டிருந்தார். அவரை கடையம் சரகத்தை சார்ந்த வனக்காவலர்கள் நெல்லை நாயகம் உட்பட 5 பேர் அணைக்கரைமுத்துவின் குடும்பத்தை செர்ந்த எவருக்கும், எந்த தகவலும் கொடுக்காமல், மேல் சட்டை கூட அணிய விடாமல், அவர்களுடைய தோட்டத்தில் வேலி அமைத்தது சம்பந்தமாக கடையம் அருகே சிவசைலம் என்ற பகுதியில் அமைந்துள்ள வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இரவு 12 மணியளவில் மூன்று வனக்காவலர்கள் வந்து வீட்டில் உறங்கி கொண்டிருந்த அவருடைய துணைவியார் மற்றும் மகளை தட்டி எழுப்பி அவருடைய சட்டையை கேட்டு வாங்கிச் சென்றுள்ளனர். அதையெடுத்து ஒன்றரை மணி நேரம் கழித்து, அவருடைய மூத்த மகன் நடராஜனை வனக்காவலர்கள் தொடர்பு கொண்டு “உங்களுடைய தந்தை அணைக்கரைமுத்து ஆபத்தான நிலையில் உடல் நலக் குறைவாக உள்ளார். அவரை உடனடியாக அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறியிருக்கின்றனர்.
இரவு 1.00 மணியளவில் தனது நண்பர் ஒருவரின் வாகனத்தை அமர்த்திக்கொண்டு தந்தையை காண சிவசைலத்திலுள்ள வனச்சரக அலுவலகத்திற்கு சென்ற போது எதிரே, வனக்காவலர்கள் அவர்களுடைய வாகனத்தில் அணைக்கரைமுத்துவை அழைத்து வந்திருக்கின்றனர். வாகனத்தை நிறுத்தி, அவர்களுடைய வாகனத்தில் ஏறிக்கொள்ளுமாறும், விவசாயி அணைக்கரைமுத்து நினைவற்று இருந்ததால் தாங்கி பிடித்து கொள்ளுமாறும் கூறியுள்ளனர். அப்பொழுதே, அணைக்கரைமுத்து எவ்வித பேச்சு மூச்சு இன்றி இருந்ததையும், அவருடைய வெற்று உடம்பில் 18 காயங்கள் இருந்ததையும் அவரது மகன் கண்டுள்ளார். அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அருகிலிருந்த கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு எவ்வித சிகிச்சையும் அளிக்க மறுக்கவே, அருகிலிருந்த தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், ”அவர் இறந்து ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது, எந்த முயற்சியும் எடுக்க இயலாது” என்று கூறி, அவரது பிரேதத்தை அன்று இரவு தென்காசி அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் வைத்து இருக்கிறார்கள். நேற்று காலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மாஜிஸ்திரேட் விசாரணையில் 18 காயங்கள் உடம்பில் இருந்தது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நேற்று மாலை 5 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யவேண்டாம் என கேட்டு கொண்ட போதும், இது ஸ்பெஷல் ஆர்டர் என கூறி, குடும்ப உறுப்பினர்களின் அனுமதி இல்லாமல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இத்தொடர் சம்பவங்கள் முழுக்க முழுக்க வனக்காவலர்களுடைய தாக்குதலுக்கு ஆளாகி, அவர்களுடைய அலுவலகத்திலேயே அவர் மரணம் எய்தியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
எனவே, இது ஒரு வனக்காவல் அலுவலக கொலை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. மூன்று நாட்கள் ஆகியும் கூட இன்னும் வனக்காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யாமலும், அவர்கள் கைது செய்யப்படாமலும் இருப்பது அவர்களை பாதுகாப்பதற்கு ஒப்பானதாகும். இது எந்த விதத்திலும் நியாயமில்லை.
எனவே, சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்ததை போல, இவ்வழக்கையும் சிபிஐயிடம் ஒப்படைக்கவும், மறு பிரேத பரிசோதனை செய்யவும், அவர்களுடைய குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பு அளிக்குமாறும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விவசாயி அணைக்கரை முத்து உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-கே.பி.சுகுமார், எஸ்.திவ்யா.