சேலம் மாவட்டம், ஏற்காட்டை சேர்ந்த அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ இதுவரை 300-க்கும் மேற்பட்ட அந்துப்பூச்சிகள் இருப்பதைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியுள்ளார்.
உலகில் மிகப்பெரிய அட்லஸ் அந்துப்பூச்சி, நிலா பட்டாம்பூச்சி, ஆந்தைக் கண் பட்டாம்பூச்சி என பலவற்றை புகைப்படம் எடுத்து பதிவு செய்துள்ளார்.
தற்போது மண்டையோட்டு பருந்து அந்துப்பூச்சி ஒன்றை, ஏற்காடு, ஜேவியர் காட்டேஜ் பகுதியில் இவர் கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து ஏற்காடு இளங்கோ கூறியதாவது:
“இந்த வகையான அந்துப்பூச்சிகள் உலகில் 3 வகைகள் மட்டுமே உள்ளன. இதன் முதுகுப்புறத்தில் மனித மண்டை ஓடு அடையாளம் காணப்படுகிறது. இது இரவில் மட்டும் நடமாடும். 7 முதல் 14 நாட்கள் மட்டுமே உயிர்வாழும். ஆகவே இதை எளிதில் காண முடியாது. இந்த அந்துப்பூச்சியை ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் கெட்ட சகுனமாக பார்க்கின்றனர். ஆகவே இதை மரணத்தின் தலை அந்துப்பூச்சி என அழைக்கின்றனர்.
இது பெரிய அந்துப்பூச்சி. விமானம் போல் பறக்கும். நீண்ட தூரம் வரையில் பறக்கும். இறக்கையை விரித்த நிலையில் 12 செ.மீ நீளத்தைக் கொண்டுள்ளது. மிக அழகிய, பகட்டான நிறத்தில் தோற்றம் அளிக்கும். இதைத் தொட்டால் சுண்டெலி கீச்சிடுவது போல் சப்தம் செய்து, எச்சரிக்கிறது. இவை தேனீ கூட்டிற்குள் சென்று தேனைக் குடிக்கின்றன. ராணி தேனீ போல் வாசனையை பரப்பி, தேனீக்களை ஏமாற்றி தேனைக் குடிப்பதால் இதை ‘தேனீ கொள்ளைக்காரன்’ எனவும் அழைக்கின்றனர்.
இது மிகவும் பிரபலமான அந்துப்பூச்சி என்பதால், பல ஆங்கிலத் திரைப்படங்களில் இந்த அந்துப்பூச்சியை காட்டுகின்றனர். வெளிநாடுகளில் தங்களது உடல்களில் டாட்டூவாக இந்த அந்துப்பூச்சியின் ஓவியத்தை வரைந்து கொள்கின்றனர்.” -இவ்வாறு கூறினார்.
-நே.நவீன் குமார்.
Achariyamathan…….irukku….