கடந்த காலங்களில் உள்கட்சி பிரச்சனைகளாலும், மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளாலும் மற்றும் இலங்கையில் நடைப்பெற்ற இறுதி யுத்தத்தில் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி, தடை செய்யப்பட்ட அமிலங்கள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு லட்சக்கணக்கான அப்பாவி ஈழ தமிழர்களை கொன்று குவித்த குற்றத்திற்காக அரசியலில் இருந்தும், ஆட்சி அதிகாரத்தில் இருந்தும், அப்புறபடுத்தபட்ட மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சகோதரர்களும்,மற்றும் அவரது வாரிசுகளும், மிகப் பெரிய அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகி, அவமானங்களை சந்தித்தனர்.
மேலும், உச்சபட்சமாக இலங்கையில் நடைப்பெற்ற சட்டவிரோத போர் குற்றத்திற்காக மஹிந்த ராஜபக்ஷவை, சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை, உலகம் முழுவதும் எதிரொலித்தது. இதன் மூலம் ராஜபக்ஷேக்களின் அரசியல் பொது வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிடும், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் இத்தோடு முடிந்து விடும் என்றெல்லாம், உலக அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே அவர்களுக்கு நடக்கவில்லை. எல்லாமே ஒரு நாடகமாக தான் இருந்தது.
இந்நிலையில், இலங்கையின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக ராஜபக்ஷவின் வகையறாக்கள் மீண்டும் அவதாரம் எடுத்துள்ளனர். ஆம், தம்பி ஜனாதிபதி, அண்ணன் பிரதமர் என்ற அந்தஸ்து மீண்டும் அவர்களுக்கு கிடைத்துள்ளது. அண்ணனுக்கு தம்பி பதவி பிரமாணம் செய்து வைக்கும் அரிய வாய்ப்பும் இன்று கிடைத்திருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும் போது ஞாபக மறதி என்பது இலங்கை மக்களின் தேசிய வியாதியாக இருக்குமோ என்ற சந்தேகம் இயல்பாகவே தற்போது எழுந்துள்ளது.
காலச் சக்கரத்தில் எது எப்போது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு இது மிகப் பெரிய உதாரணமாக அமைந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் எவ்வளவு பெரிய குற்றவாளியும், நிரபரதியாக ஆகிவிடும் வாய்ப்பு ஜனநாயகத்தில் எழுதப்படாத தீர்ப்பாகவே இன்று வரை உலக அரங்கில் இருந்து வருகிறது. இதற்கு இலங்கை மக்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அதனால் தான் “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்று சொன்னார்களோ?!
எது எப்படியோ ராஜபக்ஷவின் வகையறாக்களுக்கு காலம் மீண்டும் மிகப் பெரிய ஒரு வாய்ப்பை அளித்து இருக்கிறது. கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கும், தவறுகளுக்கும் மற்றும் அரசியல் பிழைகளுக்கும் இதன் மூலம் பரிகாரம் தேடி கொள்ளும் மிகப் பெரிய வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
வரலாற்றில் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த அசோக மன்னன் கலிங்கத்துப் போரை வென்றபின் அப்போரில் ஏற்பட்ட துயரங்களை பார்த்து,போரை வெறுத்து, புத்த மதத்தை தழுவி, புனித காரியங்களை செய்து, மக்களின் மனதில் நீங்காத புகழை பெற்றார்.
அதே போன்று இலங்கையில் ராஜபக்ஷே சகோதரர்களின் செயல்பாடுகள் இருக்குமேயானால், வாக்களித்த இலங்கை மக்களுக்கு இவர்களது ஆட்சி வரமாக இருக்கும். இதை ராஜபக்ஷேக்களின் எதிர்கால நடவடிக்கைகள் தான் நிரூபிக்கு வேண்டும்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
ullatchithagaval@gmail.com
படங்கள்:-என். வசந்த ராகவன்.
Ha ha……