உள்ளாட்சி நிர்வாகத்தில் பிரதிநிதிகளாகத் தேர்தெடுக்கப்பட்ட பெண் நிர்வாகிகளுக்கு பதிலாக, அவர்களது கணவர் மற்றும் உறவினர்களின் ஆதிக்கம் உள்ளாட்சி நிர்வாகத்தில் அனைத்து பணிகளிலும் அதிகரித்து வருவதாகவும்,பெண் நிர்வாகிகளின் கணவர் மற்றும் உறவினர்கள் அப்பாவி மக்களை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து பிழைப்பு நடத்தி வருவதாகவும், இதனால் உள்ளாட்சி நிர்வாகத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தலைவிரித்து ஆடுவதாகவும், பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் கையெழுத்துப் போடும் பொம்மைகளாக மட்டுமே இருந்து வருவதாகவும், இதற்கு சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கமிஷன் வாங்கிக் கொண்டு உடந்தையாக இருப்பதாகவும், தமிழக அரசுக்கு ஆயிரக்கணக்காண புகார்கள் வந்ததின் விளைவாக, உள்ளாட்சி நிர்வாகத்தில் தேர்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளை தவிர, அவர்களது கணவரோ, உறவினர்களோ எந்த வகையிலும் நிர்வாகச் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது என்றும், உள்ளாட்சி நிர்வாகக் கூட்டங்கள் மற்றும் பயிற்சிகளில் தேர்தெடுக்கப்பட்ட பெண் நிர்வாகிகளை தவிர, வேறு யாரும் பங்கேற்கக் கூடாது என்றும், தமிழக அரசு எச்சரித்து ஆணைப் பிறப்பித்துள்ளது. அதை அந்த, அந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவற்றின் விளைவாக, சம்மந்தப்பட்ட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், அந்த, அந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆனால், இந்த அவலம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கான “இட ஒதுக்கீடு” என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாக மாறியுள்ளது.
மேலும், பல ஊராட்சிகளில் குற்றப் பின்னனிக் கொண்ட நபர்களின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது. அதற்கு ஒரு சில காவல்துறை அதிகாரிகளும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக உடந்தையாக இருந்து வருகின்றனர். காவல் நிலைய குற்ற விசாரணை நடவடிக்கைகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் சிபாரிசோ (அல்லது) அவர்களின் கணவர் மற்றும் உறவினர்களின் சிபாரிசோ குறிக்கிட்டால், அப்படிப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அப்போதுதான் சமூக அவலங்களை முழுமையாக தடுக்க முடியும்.
இந்நிலையில், சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், வேலூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தனலட்சுமி. நேற்று இரவு வேலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தலைவர் தனலட்சுமி இல்லாமல், தலைவர் நாற்காலி அருகில், அவரது கணவர் சின்னசாமி அமர்ந்தபடியும், அவரை சுற்றி இளைஞர்கள் அமர்ந்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் நாற்காலியில் சிறுவன் ஒருவன் அமர்ந்துள்ளான். அலுவலகப் பணி நேரம் முடிந்த பின்னர், அலுவலகம் பூட்டப்பட்டு, அதன் சாவி ஊராட்சி செயலரிடமே இருக்கும்.
இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் விதிகளை மீறி, ஊராட்சி அலுவலகத்தில் தலைவரின் கணவர் சின்னசாமி, இளைஞர்களுடன் அமர்ந்து ஆலோசனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கிராம ஊராட்சி பி.டி.ஓ. குணசேகர் கூறியதாவது:
“இரவு நேரங்களில் அலுவலகத்தை திறப்பதும், தலைவர் நாற்காலியில் வேறு நபர்கள் அமர்வதும் தவறுதான். இது குறித்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.
-நே.நவீன் குமார்.