சேலம் மாவட்டம், ஏற்காடு, செம்மநத்தம் ஊராட்சிக்குட்பட்ட காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராரா எஸ்டேட்டில் ஜார்கன்ட் மாநிலம், கூட்டி கிராமத்தை சேர்ந்த ராம்பகன் மகன் கோண்டாபகன் (41), மற்றும் அவரது மனைவி சுதிகேன்ஸ் (36) ஆகியோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள பணியாளர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் உறவினர் ஹைரா போத்ரே என்பவர் திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வாரமாக கோண்டாபகன் – சுதிகேன்ஸ் குடியிருப்பிற்கு அருகில் உள்ள குடியிருப்பில் தங்கியுள்ளார். இவர்கள் மூவரும் கடந்த 3 தினங்களாக ஒன்றாக மது அருந்தி வந்ததாகவும், நேற்று இரவு மூவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு, இந்தி பாடல்களை சத்தமாக கேட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து எஸ்டேட் மேலாளரிடம் அருகில் வசிக்கும் ஜார்கன்ட் மாநிலத்தை சேர்ந்தவர் புகார் அளித்துள்ளனர். மேலாளர் சுனில்குமார் அங்கு வந்து கதவு தட்டி திறக்காததால், கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு கோண்டாபகன் தலையில் வெட்டியும், சுதிகேன்ஸ் கழுத்தறுகக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். ஹைரா போத்ரேவை காணவில்லை.
பின்னர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, சேலம் ரூரல் டி.எஸ்.பி. உமாசங்கர், ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் லில்லியை கொண்டும் தேடுதல் நடத்தப்பட்டது.
மேலும் ,இருகொலைகளையும் ஹைரா போத்ரே தான் செய்திருக்க கூடும் என்று சந்தேகித்து, ஏற்காடு மலைப்பாதை சோதனைசாவடிகளில் சோதனையில் ஈடுபட்டு வருவதாகும், அருகில் உள்ள மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தேடுதல் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல் ஆய்வாளர் ஆனந்தன் தெரிவித்தார்.
-நே.நவீன் குமார்.