காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் கிடங்கு மேலாளராக பணிபுரிந்து வந்த சரண்யா (வயது 24) என்ற பெண் அதிகாரி, இந்த வேளாண்மை விரிவாக்க மைய கிடங்கில் கழிப்பிட வசதி இல்லாததால், சிறுநீர் கழிக்க அருகிலுள்ள வீட்டின் பின்பகுதிக்கு சென்றபோது, எதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியானார்.
சரண்யா சென்று வெகுநேரம் ஆனதால் அந்த வீட்டில் இருந்தவர்கள் பின்புறம் சென்று பார்த்தபோது சரண்யா கழிவுநீர் தொட்டியில் விழுந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக சரண்யாவை கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கை அளிக்குமாறு, தலைமைச் செயலாளர் மூலம் தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
அரசாங்க அலுவலகத்தில் அடிப்படை வசதியை வழங்கத் தவறிய சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து ஆறு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அந்த நோட்டிஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் நலனுக்காக தங்கள் கடமைகளை நிறைவேற்றும் தனது அரசு ஊழியர்களுக்கு, அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க மாநில அரசு தவறிவிட்டதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com